ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் எழுதிய 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் நேற்று (10) வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில், அவ் அமைப்பின் தலைவரும் ஈழத்து எழுத்தாளருமான தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டார்.
மக்கள் நிறைந்த அரங்கம்
விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த போரான குடாரப்பு தரையிறக்கம் குறித்த இந்த நாவல் வெளியீட்டில் அரங்கம் நிறைந்த மக்கள் வருகை தந்தனர்.
மக்களின் மகத்தான வரவேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாவலின் அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
முதல் பிரதி
நாவல் வெளியீட்டில் முதல் பிரதியினை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட, கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரும் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தின் தலைவருமான சி. மோகனபவன் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, இலங்கை குமரித் தமிழ் பணி மன்றத்தின் தலைவர் குமரிவேந்தன், பண்டிதர் பரந்தாமன் கலைக் கல்லூரியின் முதல்வர் திரு சௌந்தர்ராஜன், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய முதல்வர் சின்னப்பா நாகேந்திரராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் வரவேற்புரையை தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் கி. அலெக்ஷன் வழங்க, வெளியீட்டுரையை கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அ. வேழமாலிகிதன் வழங்கினார். விமர்சன உரைகளை ஆசிரியர்களான அ. சத்தியானந்தனும் இராசேந்திரகுமார் காண்டீபனும் வழங்கினர்.
மூத்த எழுத்தாளருக்கு மதிப்பளிப்பு
இதேவேளை நிகழ்வில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் மதிப்பளிப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் படைப்பாளிகள், அரச ஊழியர்கள், இளைஞர், யுவதிகள், பொதுமக்கள் எனப் பலரும் திரண்டு கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.