ஈழத் தமிழினத்தின் இறையாண்மைக்கு நீதி வேண்டி நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டங்களையும் அபிலாஷை வெளிப்பாடுகளையும் சிங்கள தேசம் எப்போது புரிந்து கொள்ள தலைப்படுகின்றதோ அப்போதுதான் அர்த்தம் மிகுந்த இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (Shritharan) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (21) இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ”கடந்த எட்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்காக அவர்களின் இறையாண்மையை நிலைநிறுத்துவதற்காக சிங்கள பௌத்த ஒடுக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக இரத்தமும் சதையுமாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.
சிங்கள பௌத்த பேரினவாதம்
இந்த வலியின் நீட்சியில் உருவான ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான அரசியல் இயக்கங்களில் ஒன்றாக தன்னை கட்டமைத்துக் கொண்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசியமாநாட்டில் உரையாற்றக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை காலத் தேவை கருதிய வரலாற்று சந்தர்ப்பங்களில் ஒன்றாகவே நான் பார்க்கின்றேன்.
ஆத்மார்த்தமாக அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் புதிய உலக சூழ்நிலைகளை அனுசரித்தவாறு எமது இனத்தின் சமத்துவ வாழ்விற்கான பயணத்தை நாம் எல்லோரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்ற காலக்கடமை எம் ஒவ்வொருவரது கரங்களிலும் தரப்பட்டிருக்கின்றது.
அரச இயந்திரத்தின் கொள்கை வகுப்பினையும் இனவாத நோக்கில் கட்டமைக்கப்பட்ட அதிகார பீடங்களின் செயல்முறைகளையும் நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதில் தெளிவுற்றுள்ளோம்.
இருந்த போதும் எமது அடிப்படை விருப்புகளை கூறுகின்ற எமது அரசியல் உரிமையின் மீது போர் தொடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தமிழ்தேசியம் எனும் ஒரு குடையின் கீழ் நின்று கூட்டாய் எதிர்க்கும் திராணியை உருவாக்குவதில் தான் இன்று தமிழினம் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் குரல்
எட்டு தசாப்தங்கள் கடந்தும் நீர்த்துப் போகாத அரசியல் அபிலாஷைகளைக் கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின் அடிப்படை மற்றும் அரசியல் உரித்துக்களை அங்கீகரித்து அர்த்தமுள்ள அரசியல் அதிகாரப் பகிர்வின் மூலம் இனச்சமத்துவத்தை அங்கீகரிக்கின்ற பொாருளாதார சபீட்சமுள்ள இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்பதை பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகள் உணர்ந்து கொள்ளும் காலமும் நேரமும் நெருங்கிவந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
இத்தகையதோர் சாதகத்தன்மை மிக்க அரசியல் சூழ்நிலையில் ஈழத்தமிழர்களின் குரலை தமிழ்தேசியம் எனும் இயங்குதளத்தில் நின்று கூட்டுக்குரலாக ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமானது.
தமிழ்த்தேசிய அரசியலில் குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளை தீர்மானித்தல், சர்வதேச உறவுகளை மெய் நிலையில் வலுப்படுத்தல், இளைய தலைமுறை அரசியலாளர்களை வலுப்படுத்தல், மக்களை அரசியல் மயப்படுத்தல் , மக்களின் உணர்ச்சியையும் திரட்சியையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தல் உள்ளிட்ட அரசியல் செல்நெறிகளை செயலுருப்பெற செய்ய வேண்டியுள்ளது.“ என தெரிவித்துள்ளார்.