ஈராக்கில் துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 6 பேர் பலியானார்கள்.ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஒழிப்பில் ராணுவ வீரர்கள் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் ஹசாத் ஷாபி என அழைக்கப்படும் அணிதிரள் படை வீரர்கள். இவர்கள் அரசு ஆதரவுடன் பயங்கரவாதத்துக்கு எதிராக சண்டையிடுவதால் துணை ராணுவ வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், ஹசாத் ஷாபி படை வீரர்கள் விடுமுறையையொட்டி ஊர்களுக்கு செல்வதற்காக தலைநகர் பாக்தாத்தில் இருந்து சலாலுதீன் மாகாணம் நோக்கி பஸ்களில் சென்று கொண்டிருந்தனர்.
மக்மூர் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, துணை ராணுவ வீரர்கள் சென்ற ஒரு பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். குண்டுகளை வெடிக்க செய்தும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய இந்த தாக்குதலில் வீரர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் 31 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.