இஸ்லாமியர்களை தடை செய்யவில்லை: டிரம்ப் அதிரடி விளக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தான் விதித்துள்ள தடை இஸ்லாமியர்களுக்கானதல்ல என்றும் தன் நாட்டை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தடை விதித்ததாக விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப், தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளால் உலக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் ஒன்று தான், இஸ்லாமியார்களை பெரும்பான்மையாக கொண்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் அகதிகள் மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவில் அனுமதிக்கபடமாட்டார்கள் என்று கூறியது. இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக டிரம்புக்கு எதிராக உலகின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு புறம் இவர்கள் போராட்டம் நடத்த மறுபுறம் பெண்கள் போராட்டம் நடத்த என டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில் இஸ்லாமியர்கள் தடை விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிரம்ப் ஒரு அந்தர் பல்டி அடித்துள்ளார். அவர் கூறுகையில், இது இஸ்லாமியர்களுக்கான தடை என்றால் அது தவறு என்றும் தான் ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு தடை விதிக்கவில்லை எனவும் தீவிரவாதிகளுக்குத் தான் தடை விதித்திருக்கிறேன்.
அதுவும் தன் நாட்டின் பாதுகாப்பு நலனுக்காகவே இதை செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் கடந்த 2011 ஆண்டு ஒபாமா இராக் அகதிகள் விவகாரத்தில் 6 மாதங்கள் தடை விதித்தார். அதே முறையைத் தான் தற்போது இந்த ஏழு நாடுகளுக்கும் நான்கு மாதங்கள் என்று தெரிவித்துள்ளேன் என கூறியுள்ளார்.
உலகில் இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 40 நாடுகள் உள்ளன. அவர்களுக்கு எல்லாம் இந்த தடை இல்லை என கூறியுள்ளார்.
மேலும் டிரம்ப் தான் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது தன்னுடைய பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களை தடை செய்வேன் என்று கூறியிருந்தார். அதற்கான முடிவையும் எடுத்தார். ஆனால் தற்போது நாட்டில் நிலவும் மோசமான சூழ்நிலையைக் கண்டு டிரம்ப் தன்னுடைய அதிகார நோக்கில் இருந்து பின் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.