ஜெருசலேமில் இஸ்ரேல் பொலிசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதை ஹமாஸ் அமைப்பினர் நிராகரித்துள்ளனர்.
ரமலான் மாதத்தையொட்டி பாலஸ்தீனத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள், இஸ்ரேலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ஏராளமானோர் இஸ்ரேலில் உள்ள புனித தலங்களுக்கு சென்று வருகின்றனர்.
அந்தவகையில் ரமலான் மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமையை அடுத்து ஜெருசலேம் பழைய நகருக்கு அருகே அல்-அக்சாவில் உள்ள மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் இஸ்ரேல் மட்டுமின்றி பாலஸ்தீனம், மேற்கு கரை போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த தொழுகைக்காக ஏராளமான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த பொலிசார் மீது திடீரென 2 பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அப்போது மற்றொருவர் ஹதாஸ் மால்கா என்ற பெண் பொலிஸ் அதிகாரியை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே பொலிசார் மீது தாக்குதல் நடத்திய அந்த 3 பேரையும் அருகாமையில் இருந்த பொலிசார் சுட்டுக்கொன்றனர்.
அவர்கள் குறித்து விசாரணை நடத்திய போது, 3 பேரும் மேற்கு கரையை சேர்ந்த பாலஸ்தீனியர்கள் என தெரியவந்தது.
இதனிடையே குறித்த சம்பவத்துக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்பதாக அறிவித்தனர். ஆனால் அதை நிராகரித்துள்ள ஹமாஸ் அமைப்பினர், தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரும் உள்ளூர் இடதுசாரி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.