பாலத்தீனியர்கள் மற்றும் இஸ்ரேல் இடையில் அமைதி ஏற்படுத்தும் வாய்ப்புகளை ஐ.நா சீர்குலைப்பதாக, அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதர் நிக்கி ஹேலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிராக மூர்க்கத்தனமான விரோதம் கொண்டுள்ள உலகின் முன்னணி அமைப்புகளில் ஐ.நாவும் ஒன்று என நிக்கி ஹேலி கூறியுள்ளார்.
அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்த பிறகு கூட்டப்பட்ட அவரச ஐ.நா பாதுகாப்பு கூட்டத்தில் நிக்கி உரையாற்றினார்.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளது. அத்துடன் ஜெருசலேத்தில் மோதல்களைத் தூண்டியுள்ளது.
பாலத்தீனிய தீவிரவாதிகள் இஸ்ரேலின் பிரதேசங்கள் மீது ரக்கெட்களை ஏவிய பிறகு, காஸா பகுதியில் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமையன்று காஸாவில் நடந்த மோதலில், கூட்டத்தினரை நோக்கி இஸ்ரேல் படையினர் சுட்டதில், இரண்டு பாலத்தீனியர்கள் பலியாகினர்.
பல தசாப்தங்களாக இந்த விவகாரத்தில் அமெரிக்கா நடுநிலையாக நடந்துவந்த நிலையில், இந்த மரபுகளை மீறி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகு மத்திய கிழக்கில் பதற்றங்கள் உயர்ந்துள்ளன.
ஜெருசலேத்தை தனது தலைநகராக இஸ்ரேல் எப்போதும் கருதுகிறது. ஆனால், 1967 போரின் போது கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக பாலத்தீனியர்கள் கூறுகின்றனர்.
”அமெரிக்காவின் முடிவு தெளிவாக அங்கீகரித்துள்ளது. ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்” என நிக்கி கூறியுள்ளார்.
”அமைதியை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும்” என கூறிய அவர், ஐ.நா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் நகர்வால், இனி அமெரிக்காவை ஒரு சமாதான தூதராக பார்க்கமுடியாது என பாலத்தீய பிரதிநிதி ரியாட் மான்சூர் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் பிரதிநிதி டேனி டானன் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ”இது இஸ்ரேலுக்கு ஒரு மைல்கல், சமாதானத்திற்காகவும், உலகிற்காகவும்” என அவர் கூறியுள்ளார்.