இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆளாகிவரும் காஸா துண்டுநிலப்பகுதி உலகத்தின் பிற பகுதிகளில் இருந்து தனிமை படுத்தப்பட்டிருக்கிறது. 40 கி.மீ. நீளம் சராசரியாக 9 கி.மீ. அகலம், சென்னை நகரின் கால்பகுதி மட்டுமே நிலப்பரப்பு என மத்திய கிழக்கின் ஒரு நூற்றாண்டுக்கு சர்ச்சைக்கு மையப்புள்ளியாக விளங்கும் காஸா என்ற துண்டு நிலப்பகுதி இவ்வளவுதான். இதை ஒரு பிராந்தியம், நகரம், நாடு என்றெல்லாம் கூறுவதைவிட மிகப்பெரிய சிறை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள். உலகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து தனிமை பட்டிருக்கும் சுமார் 18 லட்சம் பாலஸ்தீன மக்கள் இங்கு தான் முடங்கி இருக்கிறார்கள்.
இஸ்ரேலின் கண்காணிப்பில் காஸா
ஹமாஸ் தலைமையில் ஒரு அரசு இங்கு இயங்கினாலும் இஸ்ரேலின் தடுப்பு அரண்களை மீறி இந்த பகுதிக்குள் எந்த பொருளும் வந்துவிட முடியாது. உணவு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இஸ்ரேலின் கண்காணிப்பில் தான் கிடைக்கும். மருத்துவமனைகள் நிறையவே உள்ளன, ஆனால் அவசர கால மருந்துகளில் பெரும்பாலானவை கையிருப்பில் இருப்பதில்லை. உயிர் காப்பதற்கான உடனடி உதவி தேவைப்படுவோர் மட்டும் இஸ்ரேலுக்குள் சென்று சிகிச்சை பெறலாம். இதுவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தான்.
10 கி.மீ. தொலைவு மட்டுமே மீன்பிடிக்க அனுமதி
இங்குள்ள மீனவர்கள் கடலில் அதிகமாக 10 கி.மீ. தொலைவுக்கு தான் செல்ல முடியும், மீறிச் சென்றால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும். துறைமுகம் கட்டுவதற்கு இங்குள்ள மக்களுக்கு அனுமதி இல்லை. வெளிநாட்டு கப்பல்களின் உதவிகள் வந்தாலும் இஸ்ரேல் வழியாகத்தான் வந்தாக வேண்டும். வான்வெளி முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இங்கு விமான நிலையங்கள் ஏதுமில்லை.
ஒரு நாளைக்கு 12 மணிநேரம் மின்தடை
குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்க போதுமான கல்வி நிறுவனங்கள் கிடையாது. வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கும் அனுமதி இல்லை. இதனால் குழந்தை பருவத்திலேயே பலரும் வேலைக்கு செல்லும் அவளை நிலை இங்கு நீடிக்கிறது. காஸாவை முடக்கும் இன்னொரு அம்சம் மின்சாரம், காஸா முழுவதும் ஒரு நாளைக்கு 360 மெ.வா. மின்சாரம் தேவைப்படுகிறது. இங்குள்ள ஒரேயொரு மின்னுற்பத்தி நிலையத்தில் 80 மெ.வா. மின்சாரம் மட்டுமே தயாரிக்க முடியும். இதுவும் டீசல் மூலமே இயக்கப்படுகிறது. இந்த டீசலும் இஸ்ரேலிடம் இருந்துதான் பெற வேண்டும். எப்போது வேண்டுமானாலும் டீசல் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்திவிட முடியும். இதனால் காஸா முழுவதும் குறைந்தபட்சம் 12 மணிநேரம் மின்வெட்டு அமலில் இருக்கும்.
95% சுகாதாரமற்ற குடிநீர்
இன்னொரு அடிப்படை வசதியான குடிநீரும் காஸா மக்களுக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. இந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் 90 முதல் 95% குடிநீர் சுகாதாரமற்றது என ஐக்கிய நாடுகள் சபையே அறிவித்திருக்கிறது. இந்த கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு காஸா பகுதி மக்களுக்கு இருக்கும் ஒரே வழி எகிப்தை ஒட்டியுள்ள ரபா எல்லையை கடந்து செல்வதுதான். இதற்கும் எகிப்து அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால் எல்லையோரத்தில் சுரங்கங்களை தோண்டி பொருள்கள் கொண்டுவரப்படுகின்றன. உணவுப்பொருள்கள் முதல் மருந்து பொருள்கள் வரை எகிப்திலிருந்து காஸா-வுக்கு வரும் இந்த சுரங்கங்களே, காஸா-வில் உள்ள அப்பாவி மக்களுக்கு உயிர்நாடியாக உள்ளது. ஆனால் அவ்வப்போது நடத்தப்படும் தாக்குதல்கள் இந்த சுரங்கங்களையும் அடைத்து, காஸா பகுதியை நிரந்தர சிறையாகவே மாற்றி விடுகின்றன.