”ஊழல் செய்யாத கட்சி பா.ஜ.க மட்டும்தான். தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் ஊழல் கட்சிகள். மாற்றத்தைக் கொண்டுவர பா.ஜ.க-வுக்கு ஓட்டு போடுங்கள். வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் தி.மு.க-வை ஆதரிப்பதால், இந்த இடைத்தேர்தலில் தி.மு.க-வுக்கு தோல்வி உறுதி” என்று பேசினார், பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை.
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு ஓட்டு கேட்டு, மாநிலத் தலைவர் தமிழிசை பேசுகையில், ”சென்னையிலேயே இங்குதான் டெங்கு காய்ச்சல் அதிகம். குடிக்க தண்ணீர் இல்லை. ஆனால், டாஸ்மாக் கடையில் விற்பனை ஜோராக நடக்கிறது. மது ஆறுபோல ஓடுகிறது. இந்தத் தொகுதியில், டாஸ்மாக் மாத விற்பனை, இரண்டரை கோடி ரூபாய் என்கிறார்கள். ஜெயலலிதா தொகுதி என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், இந்தத் தொகுதியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை. இடைத்தேர்தலுக்கு ஓட்டு கேட்க வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தொகுதி மக்களின் தேவைகளை உடனே நிறைவேற்றுவோம்’ என்று சொல்லி ஏமாற்றுகிறார். தேர்தல் வந்தால்தான் மக்களைப் பற்றி அ.தி.மு.க நினைக்கிறது. இந்தத் தொகுதியை அ.தி.மு.க-தான் பல வருடங்களாக வைத்துள்ளது. ஆனால், இந்தத் தொகுதிதான் சென்னையில் அடிப்படை வசதி குறைந்த தொகுதி.
எங்களைப் பார்த்து சிலர் சவால்விடுகிறார்கள். இத்தனை ஓட்டுகள் வாங்குவீர்களா? என்று கிண்டல் கேலி செய்கிறார்கள். வரும் 21-ம் தேதி அவர்களுக்கு தீர்ப்பு வரப்போகிறது. மக்களால் ஒதுக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியைச் சேர்ந்த வைகோ, திருமாவளவன் எல்லாரும் தி.மு.க-வை ஆதரிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பெற முடியாத காங்கிரஸ் கட்சியும் இங்கு தி.மு.க-வை ஆதரிக்கிறது. இவர்கள் முரண்பாடுகளின் மொத்த உருவம். இவர்கள் ஆதரித்துள்ளதால், தி.மு.க-வுக்கு தோல்வி உறுதிதான். அ.தி.மு.க., தி.மு.க எல்லாமே ஊழல் கறைபடிந்த கட்சிகள். இவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள். எங்கள் வேட்பாளர் ஊழல் செய்யமாட்டார் என்று நாங்கள் சவால் விடுகிறோம். உங்களால் அதைத் தைரியமாகச் சொல்ல முடியுமா… அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? மத்தியப்பிரதேசம், கோவா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் குடிநீர்ப் பிரச்னை இல்லை. ஊழல் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் நலத்திட்டத்துக்கு ஒரு ரூபாய் செலவுசெய்கிறார்கள் என்றால், அதில் ”85 பைசா” ஊழல் பணமாக எடுத்துக்கொள்கிறார்கள். 15 பைசா மட்டுமே மக்கள் நலத்திட்டங்களுக்குப் போகிறது. இந்த அவலங்களுக்கு முடிவு கட்டுவோம். மாற்றத்தைக் கொண்டுவர பா.ஜ.க-வை ஆதரியுங்கள்” என்று பேசி ஓட்டு சேகரித்தார்.