நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘டக்கர்’ திரைப்படத்தில் இளைய தலைமுறையினரை கவரும் அனைத்து அம்சங்களும் இடம் பிடித்திருக்கிறன என அப்படத்தின் இயக்குநரான கார்த்திக் ஜி. கிரிஷ் தெரிவித்துள்ளார்
‘கப்பல்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘டக்கர்’. இதில் சித்தார்த், யோகி பாபு, திவ்யன்ஷா கவுசிக், அபிமன்யு சிங், முனிஸ்காந்த், ஆர் ஜே விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
பயணத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஜூன் ஒன்பதாம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி. இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா படத்தின் நாயகன் சித்தார்த் ஆகியோர் பங்குபற்றினர்.
இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ் பேசவையில், ” இந்தத் திரைப்படத்தில் காதல் இருக்கிறது. நகைச்சுவை இருக்கிறது. சண்டை காட்சிகள் இருக்கிறது.
இளைய தலைமுறையினரைக் கவரும் உள்ளடக்கமும் இருக்கிறது. இதனை பிரதிபலிப்பதற்கு பொருத்தமான நாயகனாக சித்தார்த் இருப்பார் என நினைத்து, அவரை கதாநாயகனாக்கி இருக்கிறேன். திரைக்கதை வித்தியாசமாக இருந்ததால் சித்தார்த்தும் இந்த கதையை தெரிவு செய்து நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தின் திரைக்கதையில் துணிச்சல் மிக்க கதாநாயகியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவே நடிகை திவ்யன்ஷா கௌஷிக்கை ஒப்பந்தம் செய்தோம்.
அவரும் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு முதன்முறையாக தந்தை- மகன் எனும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். தந்தை யோகி பாபு ஒரு டான். அவருடைய மகன் யோகி பாபு ஒரு உதவாக்கரை.
எங்கே இவன் டானாகாமல் போய்விடுவானோ..! என்பதற்காக வேறு ஒரு தாதா கும்பலில் பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக இவரை சேர்த்து விடுகிறார். அந்த கும்பலில் சென்று, மகன் யோகி பாபு என்ன கலாட்டா செய்கிறார்? என்பதுதான் சுவையான திரைக்கதை. இந்த திரைப்படத்தில் இவர்களுடன் கூடுதலாக முனிஷ்காந்த் நடித்திருக்கிறார். இவர் ஒரு ஓய்வு பெற்ற ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் அபிமன்யு சிங் இந்த திரைப்படத்தில் நகைச்சுவையாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்காகவே பொறுமையுடன் காத்திருந்தோம். திரையரங்குகளில் சென்று ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ” என்றார்.