19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட இரண்டாவது இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 148 ஓட்டங்களால் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.
இலங்கையின் பவன் பத்திராஜவின் சதம் , ரனூத சோமரத்ன அரைச்சதம், அணித்தலைவர், துனித் வெல்லாலகேவின் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் வனூஜ சஹான் துல்லியமான பந்துவீச்சு ஆகியன இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களித்தது.
இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் இன்று காலை ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணித் தலைவர் துனித் வெல்லாலகே முதல் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் பவன் பத்திராஜ 113 ஓட்டங்களையும், ரனூத சோமரத்ன 58 ஓட்டங்களையும், அணித்தலைவர் துனித் வெல்லாலகே 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து சார்பில் ஜோஷுவா பொய்டன் மற்றும் ரெஹான் அஹமட் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
252 ஓட்டங்களை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 31.4 ஓவர்களில் 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 148 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர். அவ்வணி சார்பில் ஜேம்ஸ் ரியு மாத்திரம் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக அடித்திருந்தார்.
பந்துவீச்சில் வனூஜ சஹான் 5 விக்கெட்டுக்களையும், யசிரு றொட்ரிகோ மற்றும் மதீஷ பத்திரண ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், துனித் வெல்லாலகே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் காணப்படுகின்றன. முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]