கென்யாவின் தலைநகரான நைரோபியில் நடைபெறவுள்ள இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையிலிருந்து வீர, வீராங்கனைகள் 7 பேர் பங்கேற்கவுள்ளனர். 44 போட்டி நிகழ்வுகளைக் கொண்டதாக அமைந்துள்ள இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை 5 போட்டி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இலங்கை குழாம் நாளைய தினம் பண்டாநாயக்க சர்வதேச விமாநிலையத்திலிருந்து கென்யாவின் நைரோபி நகர் நோக்கி பயணமாகவுள்ளது.
20 வயதுக்குட்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் இளையோர் இப்போட்டித் தொடரின் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மத்துகம ஆனந்த சாஸ்த்திராலய பாடசாலையின் இசுரு கெளஷல்ய பங்கேற்கவுள்ளார். கொழும்பு லும்பினி வித்தியாலயத்தின் மெதானி ஜயமான்ன பெண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் , கம்பஹா திருச்சிலுவை கல்லூரியின் ஷானிக்கா லக்சானி, வலலை ஏ ரத்நாயக்க வித்தியாலயத்தின் தருஷி கருணாரட்ண ஆகிய இருவரும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.
ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் கலப்பு 4 தர 400 மீற்றர் ஓட்டப் போட்டிக்கு இசுரு கெளஷல்ய , குருணாகல் சேர்.ஜோன் கொத்தலாவல கல்லூரியின் சித்தும் ஜயசுந்தர, வேகட மத்திய கல்லூரியின் ரவிந்து டில்ஷான் பண்டார, தருஷி கருணாரட்ண, கம்பஹா திருச்சிலுவை கல்லூரியின் ஷயுரி லக்சிமா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த 7 வீர, வீராங்கனைகளுடன் அணி முகாமையாளர், பயிற்றுநர்கள் என நான்கு பேர் அடங்கலான குழுவொன்றே நாளைய தினம் (15.08.2021 கென்யாவின் நைரோபி நோக்கி பயணமாகவுள்ளனர்.
1. இசுரு கெளஷல்ய – ஆண்களுக்கான 400 மீற்றர் ,கலப்பு 4 தர 400 மீற்றர்
2. ரவிந்து டில்ஷான் பண்டார – கலப்பு 4 தர 400 மீற்றர்
3. சித்தும் ஜயசுந்தர – கலப்பு 4 தர 400 மீற்றர்
4. மெதானி ஜயமான்ன – பெண்களுக்கான 100 மீற்றர், 200 மீற்றர்
5. ஷானிக்கா லக்சானி – பெண்களுக்கான 800 மீற்றர்
6. தருஷி கருணாரட்ண – பெண்களுக்கான 800 மீற்றர் , கலப்பு 4 தர 400 மீற்றர்
7.சயுரி லக்சிமா – கலப்பு 4 தர 400 மீற்றர்
_____________________________________________________________________________