ஜூனியர்’ உலக கோப்பை தொடரை, பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் துவக்கி உள்ளது. முதல் லீக் போட்டியில், 100 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
நியூசிலாந்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடக்கிறது. நேற்று, மவுண்ட் மவுன்கனுய் நகரில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பிரித்வி ஷா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
சூப்பர் துவக்கம்:
இந்திய அணிக்கு கேப்டன் பிரித்வி ஷா, மன்ஜோத் கர்லா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக: சமாளித்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்திருந்தபோது, பிரித்வி ஷா (94) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மன்ஜோத், 86 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த சுபம் கில் (63), தன்பங்கிற்கு அரைசதமடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 328 ரன்கள் எடுத்தது. கம்லேஷ் (11), ஆர்யன் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக எட்வர்ட்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
சிவம் அசத்தல்
கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ் பிரயன்ட் (29), கேப்டன் ஜேசன் சங்கா (14) விரைவில் திரும்பினர்.
சிவம் மாவி பந்தில் மெர்லோ (38) ஆட்டமிழந்தார். கம்லேஷ் ‘வேகத்தில்’ முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் மகன் ஆஸ்டின் வாக் (6), வில் சந்தர்லாந்து (10) சிக்கினர். துவக்க வீரர் ஜாக் எட்வர்ட்ஸ் (73) மட்டும் அரைசதம் கடந்து, ஆறுதல் தந்தார். மற்ற வீரர்கள் ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி 42.5 ஓவரில் 228 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிவம், கம்லேஷ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
டிவிலியர்ஸ் சாதனை சமன்
லின்கனில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, கென்யா அணிகள் மோதின. முதலில் ‘பேட்டிங்’ செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ரேய்னார்டு டான்டர் மிரட்டினார். இவர் 121 பந்தில் 143 ரன் விளாசினார். இதன் மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த தென் ஆப்ரிக்க வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை டிவிலியர்சுடன் (143 ரன், எதிர்– இங்கிலாந்து, 2003) பகிர்ந்து கொண்டார். முடிவில், தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 341 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய கென்ய அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன் மட்டும் எடுத்து, 169 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
* ‘டி’ பிரிவு லீக் போட்டியில் இலங்கை அணி (208/3) 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை (207/8) வீழ்த்தியது.