கிளிநொச்சியில் சிறுவர் இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுவர்கள் மின்சார வயர்களால் தாக்கப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இல்லத்தின் மேற்பார்வையாளர்களே இவ்வாறு சிறுவர்களைத் தாக்கினர் என அந்த முறைப்பாட்டில் கூறப்பட் டுள்ளது.
இதுதொடர்பில் தெரியவருவதாவது:
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் வசதிகுறைந்த பெற்றோர் தமது 16 வயது மகனை சிறுவர் இல்லத்தில் இணைத்துள்ளனர். அவர் கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்விகற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்ந 21ஆம் திகதி இல்ல வளாகத்தில் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிப்பதற்காக 5 சிறுவர்கள் மரத்தில் ஏறியுள்ளனர். இதனைக்கண்ட இல்ல மேற்பார்வையாளர் மின் இணைப்பு வயர்களால் அவர்களைத் தாக்கியுள்ளார்.
இதனால் சிறுவர்களின் உடலில் அடிகாயங்கள் ஏற்பட்டுள்ளன. காயம் வெளியில் தெரிந்து விடும் என்பதற்காக சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
காயம் மறைந்ததும் பெற்றோரை அழைத்து சிறுவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது – என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டது.
இது தொடர்பில் இல்லத்தின் தலைவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ‘‘குறித்த சிறுவர்களால் பல பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டமையால் இவர்களை தொடர்ந்தும் இல்லத்தில் வைத்திருக்க முடியாதென நாம் ஏற்கனவே 3 தடவைகள் திணைக்களத்துக்கு எழுத்தில் அறி வித்துள்ளோம்’’ – என்றார்.