ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புக்களுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் ஞாயிற்றுக்கிழமை (25) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து , இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் உணவு உதவி திட்டங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்யவுள்ளார்.
அத்தோடு இலங்கையின் நலன்கள் தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாடு மற்றும் இலங்கையுடனான நீடித்த பங்காண்மை ஆகியவற்றினை மீளவலியுறுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளார்.
சின்டி மெக்கெய்ன் நாட்டில் தங்கியிருக்கும் நாட்களில் கொழும்பில் முக்கிய அரச தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
குறித்த சந்திப்புக்களுக்கு மேலதிகமாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் இணைந்து மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகள் , விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கு விஜயம் செய்து அமெரிக்க அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்ட மனிதாபிமான உதவித்திட்டங்கள் ஊடாக நிவாரணம் பெற்றவர்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துபவர்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.