இலங்கையில் வித்தியாசமான ஒன்றை அனுபவிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் இந்த நேரத்தில் நாட்டுக்கு வரலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவது பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் வெளிநாட்டவர்கள் செல்வதற்கு இலங்கை பாதுகாப்பானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வித்தியாசமான அனுபவத்தை விரும்புபவர்கள் இங்கு வரலாம். ஒருவேளை அவர்கள் போராட்டங்களை ஆதரிக்கலாம். இலங்கை ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்லுங்கள் என்ற பதாதைகளை ஏந்தியவாறு அவர்களால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடியும். அல்லது பிரதமர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தலாம்.
நீங்கள் விரும்பிய எதை வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி. ஆனால் இது ஒரு தீவிர பிரச்சனை. சுற்றுலா துறையானது வளர்ந்து வரும் சந்தையில் மிக முக்கியமான வருமான ஆதாரங்களில் ஒன்றாகும். சுற்றுலா பயணிகள் வரக்கூடாது என்கிறீர்களா? இது ஒரு முக்கியமான கேள்வி என பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த பிரதமர், சுற்றுலாப் பயணிகளின் வருகையை நாங்கள் ஊக்கமிழக்கச் செய்வில்லை. ஆனால் வெளிநாட்டு கையிருப்பு தட்டுப்பாடு, நாட்டில் நிலவும் போராட்டங்கள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் அவர்கள் தற்போது இலங்கைக்கு வரமாட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.