இலங்கை மின்சார சபை தனியார் மயமாக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே மின், எரிசக்தி மற்றும் வணிக மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக ஆற்ற வேண்டிய பல கடமைகள் உள்ளன. அவை அடையாளம் காணப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டியது முக்கியமானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் அது பாரிய பிழையாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘நாம் நிதி ரீதியாக ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும். இலங்கை மின்சார சபையின் செலவு மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகள் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும். தனக்கென ஒரு பெயரை உருவாக்கிய இலங்கை மின்சார சபை மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
இலங்கை மின்சார சபை என்பது இந்த நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனமாகும்.
பல்வேறு தடைகள் இருந்தாலும், அவற்றைக் கடந்து நாம் முன்னேற வேண்டும். மின் தடை என்பது நாட்டுக்கு ஒரு பெரிய பிரச்சினையாகும். ஒரு மின்பிறப்பாக்கி பழுதானால் முழு அளவில் மின்சாரம் முடக்கப்படும் என்று நாம் அஞ்சுகிறோம்.
போட்டியின் மூலம் ஒரு நாட்டை உருவாக்க முடியும். எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கும் கருத்து எந்த அரசியல் கட்சிக்கும் சாத்தியமற்றது.
உற்பத்தி செலவுகளை நாம் தொடர்ந்து குறைக்க வேண்டும். எனவே, மின்சார பட்டியலின் விலையை குறைக்க வேண்டியது அவசியம். இது நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும்.
எண்ணெய் மாஃபியாவுக்குள் தள்ள சிலர் முயற்சிக்கின்றனர். இந்த விடயங்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இதைச் செய்வதற்கான சிறந்த வழி புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதுதான். முடிந்த வரை புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நாம் சேகரிக்க வேண்டும்.
இன்று சுமார் 22 பில்லியன் மின்சார தேவை உள்ளது. இருப்பினும், எங்களால் அதனை பூர்த்தி செய்ய முடியவில்லை. இது நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு தடையாகும்’ என அவர் தெரிவித்துள்ளார்.