இந்த வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதியளவு இருப்புக்களை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் நிறுவனம் ஆகியன, மேலதிக நேர செலவுகளைக் குறைப்பதற்காக கடந்த 4 மாதங்களில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் செயற்படவில்லை என்றும் மேலும் அவர் குறிப்பட்டார்.
எரிபொருளின் விலை குறைவடையும் என்பதை முன்பே கணித்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கடந்த சனிக்கிழமையன்று எரிபொருள் கொள்வனவு செய்யாமல் இருந்தது.
இதன் காரணமாகவே, தற்போது பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் நிலையங்களில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பராமரிக்காமை , விலை திருத்தத்தின் பின்னர் நுகர்வோரின் உடனடி தேவை அதிகரித்தமை மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டின் அதிகரிப்பு ஆகியன எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான பிரதான காரணிகளாக அமைந்ததாக அமைச்சர் மேலும் கூறினார்.