பங்களாதேஷில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட தெற்காசிய பெண்கள் கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவிகள் நால்வர் இடம்பெறுகின்றனர்.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய 5 நாடுகள் இப் போட்டியில் பங்குபற்றுகின்றன.
இப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியினர் இன்று காலை பங்களாதேஷை சென்றடைந்துள்ளனர்.
இலங்கை அணியில் மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சிவநேஸ்வரன் தர்மிகா, உருத்திரகுமார் யோகிதா, ரகுதாஸ் கிருசாந்தினி, மரியநாயகம் வெலன்டினா ஆகியோர் இடம்பெறுகின்றனர். அவர்களில் தர்மிகா உதவி அணித் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பெண்கள் கால்பந்தாட்ட வரலாற்றில் வட மாகாணத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர், 19 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
அத்துடன் இவ்வணியின் பொறுப்பாசிரியையாக மகாஜனா கல்லூரி கால்பந்தாட்ட அணியின் பொறுப்பாசிரியை பத்மநிதி செல்லையா நியமிக்கப்பட்டுள்ளமை மற்றொரு விசேட அம்சமாகும்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணியின் தலைவராக விசாகா வித்தியாலய மாணவி இமேஷா வர்ணகுலசூரியவும் இரண்டாவது உதவி அணித் தலைவராக கேட்வே கல்லூரி மாணவி மாலிகா அமித்தும் பெயரிடப்பட்டுள்ளனர்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணி தனது முதலாவது போட்டியில் பூட்டானை எதிர்வரும் சனிக்கிழமை எதிர்த்தாடுவதுடன் 13 ஆம் திகதி இந்தியாவை சந்திக்கவுள்ளது.
நேபாளத்தை 15 ஆம் திகதி சந்திக்கும் இலங்கை, தனது கடைசிப் போட்டியில் பங்களாதேஷை 19ஆம் திகதி எதிர்த்தாடும்.
லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் 21ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]