பங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் முன்னாள் அணித் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரட்ன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அணியில் இடம்பெறுவோரில் இந்த மூவரே அனுபவம் மிக்க சிரேஷ்ட வீரர்களாவர்.
தனஞ்சய டி சில்வாவை தலைவராகக் கொண்ட இலங்கை குழாத்தில் சுழல்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நான்கு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய வனிந்து ஹசரங்க, கடைசியாக பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2021இல் விளையாடியிருந்தார்.
அத்துடன் அறிமுக வீரராக வலதுகை சுழல்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார். நீர்கொழும்பு புனித பேதுருவானர் கல்லூரியின் முன்னாள் வீரரான நிஷான் பீரிஸ் முதல்தர உள்ளூர் கிரிக்கெட்டில் 37 போட்டிகளில் 153 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
ஆனால், அவருக்கு இறுதி அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுத் கருணாரட்னவின் ஆரம்ப ஜோடியாக நிஷான் மதுஷ்க தொடர்ந்து விளையாடவுள்ளார். 6 போட்டிகளில் விளையாடியுள்ள நிஷான் மதுஷ்க ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 444 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
தொடர்ந்து குசல் மெண்டிஸ் (உதவி அணித் தலைவர்), ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்), சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், ப்ரபாத் ஜயசூரிய, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ராஜித்த ஆகியோர் இறுதி அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை ரமேஷ் மெண்டிஸுக்குப் பதிலாக சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் இறுதி அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
அவர்களை விட லஹிரு குமார, லஹிரு உதார, சாமிக்க குணசேகர ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.