இந்தியாவுக்கு எதிராக பல்லேகலையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட தொடரை முன்னிட்டு பெயரிடப்பட்ட 16 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாத்திலிருந்து துஷ்மன்த சமீர நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்தார்.
லங்கா பிறீமியர் லீக் போட்டிகளின்போது உபாதைக்குள்ளான துஷ்மன்த சமீர பூரண ஆரோக்கியம் பெறவில்லை என மருத்துவ அறிக்கை கிடைத்துள்ளதை அடுத்தே அவரை குழாத்திலிருந்து நீக்கியதாக அவர் கூறினார்.
அவருக்குப் பதிலாக பெரும்பாலும் அசித்த பெர்னாண்டோ குழாத்தில் இணைத்துக்கொள்ளப்படுவார் என அவர் மேலும் குறிபபிட்டார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் புதன்கிழமை (24) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை குழாத்தில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சந்திமால் ஆகிய நான்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் பெயரிடப்பட்டுள்ள நிலையில் யார், யார் ஆரம்ப வீரர்களாகப் பயன்படுத்தப்படுவார்கள்? அவிஷ்க பெர்னாண்டோவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? எனக் கேட்டபோது,
‘வழமைபோல் பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் மெண்டிஸும் ஆரம்ப வீரர்களாக விளையாடுவர். குசல் ஜனித் பேரேரா 3ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவார். குழாத்தில் இடம்பெறும் அவிஷ்க பெர்னாண்டோ மத்திய வரிசை வீரராக விளையாட வாய்ப்புள்ளது’ என பதிலளித்தார்.
அதேவேளை, கிரிக்கெட் தொடர்களில் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கையையும் மனஉறுதியையும் இலங்கை வீரர்கள் கொண்டிருப்பதுடன் மிகச் சரியான திட்டமிடல்களுடன் போட்டிகளில் விளையாடுவது அவசியம் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்தார்.
இளம் வளர்ந்துவரும் வீரர் சமிந்து விக்ரமசங்க தொடர்பாக கேட்டபோது,
‘சகலதுறை வீரரான சமிந்து விக்ரமசிங்க தனது திறமையை லங்கா பிறீமியர் லீக் போட்டியில் நிரூபித்துள்ளார். பல்லேகலை ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்’ என்றார்.
ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவி யாருக்கு வழங்கப்படும் என உப்புல் தரங்கவிடம் தனிப்பட்ட முறையில் கேட்டபோது, அந்தப் பொறுப்பும் பெரும்பாலும் சரித் அசலன்கவிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.