இலங்கை கிரிக்கெட் வீரர்களது ஒப்பந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
‘மே மாதத்திலிருந்து இழுபறி நிலையில் இருந்துவந்த கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தங்கள், மத்திய ஒப்பந்தம் என அழைக்கப்படாவிட்டாலும் வீரர்களுக்கு பலன் கிடைக்கக்கூடிய வகையிலான ஓர் ஒப்பந்தம் வழங்கப்படும்.
வீரர்களது நிலைமைகள், அவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளை நாங்கள் அறிவோம். எனினும் இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்துக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் கசப்பானது.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் பின்னர் ஒப்பந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைப்போம் என உறுதி வழங்கியும் அதற்கு அவர்கள் உடன்படாதது கவலை தருகின்றது’ என மோஹான் டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.
‘வீரர்களது தேவைகளை நாங்கள் அறிவோம். எதுவாக இருந்தாலும் தங்களது ஆற்றல்களைக்கொண்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு வருவாயை அவர்கள்தான் தேடிக்கொடுக்கின்றார்கள். அதனை எம்மால் மறுக்க முடியாது. எனவே அவர்களுக்கு அதி சிறந்த ஒப்பந்தங்களை வழங்க நாங்கள் முயற்சித்துவருகின்றோம்’ என்றார் அவர்.
தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைக் குழுவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் இந்த வருடம் வீரர்களுக்கு மத்திய ஒப்பந்தம் வழங்குவதில்லை என தீர்மானித்தன. இந் நிலையில் ஆற்றல் வெளிப்பாடுகள் அடிப்படையிலான ஒப்பந்தங்களின் வெளிப்படைத் தன்மை குறித்து வீரர்கள் கேள்வி எழுப்பியதால் இழுபறி நிலை ஆரம்பித்தது. எவ்வாறாயினும் மத்திய ஒப்பந்தத்துக்குப் பதிலாக கிரிக்கெட் சுற்றுப்பயண ஒப்பந்தத்திலேயே வீரர்கள் கைச்சாதிட்டனர்.
இந்த வருடத்துக்கு வீரர்களுடன் மத்திய ஒப்பந்தம் செய்யப்படமாட்டாது எனவும் ஜனவரி மாதத்தில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் குறிப்பிட்ட மொஹான் டி சில்வா, வீரர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளைப் போக்கும் வகையில் நியாயமான முறையில் அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என்றார்.
‘வீரர்களுக்கு பல்வேறு நிதி பிரச்சினைகள் இருக்கும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். லீஸ் எனும் தவணை அடிப்படையில் அவர்கள் கொள்வனவு செய்திருக்கக்கூடும். மானுடர்கள் என்ற வகையில் அவற்றை நாமும் அறிவோம். அவர்களுக்கு தொல்லை, கஷ்டங்கள் கொடுக்க விரும்பவில்லை. எனவே இனியும் தள்ளிப்போடாமால் ஒப்பந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதில் உறுதியாக உள்ளோம். என்னதான் இருந்தாலும் அவர்கள் இலங்கை வீரர்கள். அவர்கள் தேசத்துக்காக விளையாடுபவர்கள். எனவே, அவர்களைக் கவனிக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.
‘வீரர்களை சிறந்த நிலைக்கு கொண்டுவர எஸ்எல்சி பெருந்தொகை நிதியை முதலீடு செய்துள்ளது. வீரர்களின் நலன்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் நாங்கள் அறிவோம். அதேவேளை ஒழுக்கம், அர்ப்பணிப்புத்தன்மை, பொறுப்பு ஆகியவற்றை வீரர்கள் முறையாக கடைப்பிடிக்கவேண்டும்.
‘ எஸ்எல்சியின் நிருவாக சபைத் தேர்தலுக்கு முன்னர் நாங்கள் சிறிது காலம் ஒதுங்கியிருக்க நேரிட்டது. அது சரியான நேரமல்ல. அப்போது கிரிக்கெட்டை நிருவகித்தவர்கள் அணித் தலைமையை மாற்றினர். அவர்கள் புதிய ஒப்பந்தங்களுக்காக அவசரப்பட்டனர்.. இதன் மூலம் அவர்கள் எல்லாவற்றையும் குழப்பினார். அக் காலப்பகுதியில்தான் எல்லாம் நடைபெற்றது.
‘எவ்வாறாயினும் வீரர்களினின் நன்மை கருதி நியாயமான ஒப்பந்தங்களை விரைவில் வழங்குவோம்’ என மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
_____________________________________________________________________________