ஆறு மாதங்களுக்கு மேல் இழுபறி நிலையில் இருந்து வந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்தப் போதுக்கூட்டமும் புதிய நிருவாக சபை உத்தியோகத்தர்களுக்கான தேர்தலும் 2023 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை 20ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
வெட்பு மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க 21ஆம் திகதி புதன்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தேர்தலில் போட்டியிடுவோர் பற்றிய விபவரங்களை தேர்தல் குழுவினர் 22ஆம் திகதி வியாழக்கிழமை அறிவிக்கவுள்ளனர்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் 2023 ஜனவரி 14 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனவரி மாதம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் நிருவாக சபை உத்தியோகத்தர்களுக்கு 5 மாதங்கள் மாத்திரமே பதவி வகிக்க முடியும். இந்தக் காலப்பகுதியில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு திருத்தி அமைக்கப்பட்டு நிறைவெற்றப்பட்டு மீண்டும் 2023 மே 31ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
யாப்பு திருத்தி அமைக்கப்படவேண்டும் என பல தடவைகள் பீபா வலியுறுத்திவந்தபோதிலும் முன்னைய நிருவாகத்தினால் அதனை நிறைவேற்ற முடியாமல் போனதுடன் தேர்தல் பிற்போடப்பட்ட வண்ணம் இருந்தது.
விளையாட்டுத்துறை அமைச்சினால் சம்மேளன நிருவாகிகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்ட போதிலும் பின்னர் வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அது இரத்துச் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவே தற்போது கால்பந்தாட்ட நிருவாகத்தை நடத்தி வருகிறது.
இந் நிலையில் அடுத்துவரும் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக அறியக் கிடைக்கிறது. அவருடன் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் போட்டியிடுவார் என முன்னர் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்துவரும் தேர்தலில் 45 லீக்குகளுக்கு மாத்திரமே வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளது. அந்த லீக்குகளுக்கு தலா ஒரு வாக்கே அளிக்க முடியும். பழைய முறைப்படி ஒவ்வொரு லீக்குக்கும் 3 வாக்குகள் அளிக்க அனுமதிக்குமாறு சில லீக்குள் கோரிக்கை விடுத்தபோதிலும் அவை நிராகரிக்கப்பட்டன.
குருநாகல், கண்டி, அக்கரைப்பற்று ஆகிய லீக்குகள் முறையாக இயங்காததன் காரணமாக அவற்றின் வாக்குரிமை தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் குழு தெரிவித்தது.
எவ்வாறாயினும் கிளிநொச்சி, கம்பளை, அரச சேவைகள் ஆகிய லீக்குகளுக்கு வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு தேர்தல் மூலம் தெரிவான ஜஸ்வர் உமர் தலைமையிலான நிருவாக சபையின் பதவிக் காலத்தை வர்த்தமாணி அறிவித்தல் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சர் முடிவுறுத்தியதால், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு ஒன்றை ஜஸ்வர் தாக்கல் செய்திருந்தார்.
இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்திய நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது.
அதன் பின்னர் மேல் நீதிமன்ற ஓய்வுநிலை நிதிபதி யூ.எல். மஜீத் (தலைவர்), மேல் நீதிமன்ற ஓய்வுநிலை நீதிபதி பந்துல அத்தபத்து, ஒய்வுபெற்ற சிரேஷ்ட அரச அதிகாரி சிரிபால மெதவௌ ஆகிய மூவரைக் கொண்ட தேர்தல் குழு நியமிக்கப்பட்டு அக் குழுவின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.