சிரிய படையினர் அந்த நாட்டின் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக நடத்திய வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலியாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி, கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து சிரிய படைகள் கடந்த இரு வாரங்களாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.
“கிழக்கு கவுட்டா பகுதி யில் கடந்த 13 நாட்களாக அரச படையினர் நடத்திய தாக்குதல்களில் 674 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை” என்று, அங்கு பணியாற்றும் ‘வைற் ஹெல்மெட்’ எனும் தொண்டு நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதனிடையே கிழக்கு கவுட்டா உள்ளிட்ட பகுதிகளில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரிய தலைவர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படையினர் நேரடியாக போரில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.நா. சபையில் சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை ரஷ்யா தடுத்து வருவதாக, அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
சிரியாவின் ஆட்சியாளரான ஷியா பிரிவைச் சேர்ந்த ஆசாத்தை எதிர்த்து, சுன்னி முஸ்லிம் கிளர்ச்சிப் படைகள் 06 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.