ஜப்பானில் தொழில்நுட்ப உள்ளக பயிற்சியாளர்களாக, இலங்கை இளைஞர் – யுவதிகளை கூடுதலாக இணைத்துக் கொள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானின் ஐ.ஆர்.ஓ.நிறுவனத்தின் பணிப்பாளரி்டம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜப்பானில் தொழிநுட்ப பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அமைப்பான ஐ.ஆர்.ஓ. நிறுவனத்தின் பணிப்பாளர் சுகா கட்சுகாய் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு விஜயம் செய்து அமைச்சரைச் சந்தித்த போதே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தூதுக்குழுவினர் அதற்கு சாதகமான பதிலை அளித்ததுடன், இலங்கையர்களின் தொழில் நுட்ப ஆற்றல் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளை ஜப்பானியர்கள் மிக உயர்வாக பாராட்டுவதாகவும் தெரிவித்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஐ.ஆர்.ஓ மற்றும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுக்கு இடையே இலங்கை இளைஞர்களை ஜப்பானில் உள்ளக தொழிநுட்ப பயிற்சியாளர்களாக பணிபுரிய வழிநடத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2021 டிசம்பரில், கைச்சாத்திடப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.