தியத்தலாவை இலங்கை இராணுவ பாதுகாப்பு கல்லூரியின் கெடட் அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்காக இராணுவ தளபதி உள்ளிட்ட பணிக்குழாமுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
எமது நாடு உலகில் உன்னதமானதொரு பயணத்தை மேற்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பும் நாட்டை மையப்படுத்திய பிராந்திய பாதுகாப்பும் மிகவும் முக்கியமான துறையாக அமைகின்றன. நாம் பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் எமது முப்படைகளை பலப்படுத்தி தொழில்நுட்ப ரீதியாகவும் யுத்த திறன்களுடனும் பயிற்சி மற்றும் நல்லொழுக்கம் மிக்க முன்மாதிரி இராணுவமாக அமைப்பதற்கு கடந்த பல தசாப்தங்களாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாம் சுமார் 26, 27 வருட காலமாக எல்ரீரீஈ. பயங்கரவாதிகளின் பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. முப்படையினர் பொலிசார், பாதுகாப்பு சேவை உள்ளிட்ட பொதுமக்களின் உயர்ந்த அர்ப்பணிப்பின் காரணமாக அதில் நாம் வெற்றிபெற்றோம். பயங்கரவாதத்தை தோற்கடித்து யுத்தத்தில் பெற்ற வெற்றி அதன் மூலம் இராணுவத்தினருக்கு கிடைத்த அனுபவம் எமக்கு பலமான இராணுவமாக எதிர்காலத்திற்கு முகம் கொடுப்பதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. எமது இராணுவம் உலகில் கௌரவத்தை பெற்ற இராணுவமாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான காரணம் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்கக்கட்டுப்பாடுகளை கொண்ட இராணுவமாக இலங்கை இராணுவம் இருப்பதாகும். அறிவு, பயிற்சி, முதிர்ச்சி மற்றும் யுத்த திறன்களுடன் எமது இராணுவம் உன்னத இராணுவமாக மாறியுள்ளது. எமது பாதுகாப்புப் படையினர் யுத்தத்தில் மட்டும் திறமையானவர்கள் அல்ல. நாட்டின் அபிவிருத்தியிலும் சமூக நலன்பேணலிலும் விரிவான பல்வேறு பொறுப்புக்களை அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர். அண்மையில் இடம்பெற்ற பல்வேறு அனர்த்த நிலைமைகளின்போது அவர்களது பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது. எமது இராணுவத்தின் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அறிவு, அர்ப்பணிப்பு, பயிற்சி மிகச் சிறந்த நிலையில் உள்ளது. வெள்ளம், வரட்சி, மண்சரிவு, சுனாமி போன்ற நிகழ்வுகளுக்கு உலகின் ஏனைய நாடுகளைப்போன்று நாமும் முகம்கொடுத்துள்ளோம். இவ்வாறான நிலைமைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது உயிரைப் பணயம் வைத்து எமது இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் அவர்களது பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமையின்போது விமானப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நலன்பேணல் பணிகளில் ஈடுபட்டிருந்தவேளை உயிரிழந்தார். இத்தகைய அர்ப்பணிப்பை அரசாங்கமும் இலங்கை வாழ் மக்களும் மதிக்கின்றனர். எனவே உங்களுக்கு பெரும் அங்கீகாரமும் மக்களின் அன்பும் உள்ளது.
உங்களது மனோ வலிமை, முதிர்ச்சி, ஆளுமை, அறிவு, அனுபவம், ஒழுக்கம் ஆகிய அனைத்தும் சாதாரண மனிதர்களைப் பார்க்கிலும் ஏனைய சேவைகளில் உள்ளவர்களை பார்க்கிலும் முன் உதாரணமானதாகும். எதிர்காலத்திற்காக மிகவும் நல்ல முறையில் இந்த அனைத்து துறைகளிலும் நாம் செயற்பட முடியும். போதைப்பொருள் ஒழிப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு செலுத்துகின்றன. இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் நீங்கள் வழங்கிவரும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கதாகும்.
இன்று நாட்டில் யுத்தம் கிடையாது. கடந்த யுத்தத்தில் நாம் பெற்றுக்கொண்ட அனுபவத்துடன் எதிர்காலத்திற்கு நாம் இன்னும் பலமாகவும் எதிர்பார்ப்புடனும் முகம் கொடுப்பதற்கு நவீன தொழில்நுட்ப உலகில் உள்ள சவால்களுக்கு முகம் கொடுக்க தயாராவது அவசியமாகும். எமது முப்படையினர் வரலாற்றில் முகம்கொடுத்த அனைத்து சவால்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றிகள் மூலம் கிடைத்த அனுபவங்கள் மற்றும் முதிர்ச்சியை நாம் எப்போதும் மதிக்க வேண்டும். எதிர்காலத்திற்கு முகம் கொடுப்பதில் இந்த அனைத்து துறைகளிலும் உள்ள முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு எமது தாய் நாட்டுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் மற்றும் கடமைளை நாம் நிறைவேற்ற வேண்டும். இனங்களுக்கிடையே நல்லிணக்கம் சமாதானம் சகோதரத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். தேசிய நல்லிணக்க கொள்கையில் முப்படையினர் மேற்கொண்டு வரும் பணிகளை நாம் பாராட்டுகின்றோம். இந்த நாட்டில் எவ்வித பேதமுமின்றி சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர், மலேயர் ஆகிய அனைத்து இனங்களும் நாட்டின் முப்படையினரை விரும்புகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் மேற்கொண்டு வரும் பல்வேறுபட்ட பணிகளாகும்
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவருக்கும் தைரியமும் அதிஷ்டமும் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். அனைத்து நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் எமது பொறுப்புக்களை மேற்கொள்வோமென தெரிவித்துக்கொள்கிறேன். பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறன்.
நன்றி.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
19.12.2017