இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் நான்காவது பதிப்பான, 2023 ஆம் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றில், இலங்கை இன்று (18) முதல் முறையாக இந்தியாவை எதிர்கொள்ளும்.
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைனாத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இப் போட்டியானது இரவு – பகல் ஆட்டமாக நடைபெறும்.
சுமார் 2 வருடங்களின் பின்னர் பிரேமதாச மைதானத்தில் அரங்கேறும் ஆட்டம் இதுவாகும்.
நாட்டின் கிரிக்கெட் எதிர்காலத்தை வெற்றிகரமாக மாற்றியமைக்கும் நோக்குடன் இளம் வீரர்களின் திறமைகளை நம்பி, இலங்கை அணி பல புதிய வீரர்களுடன் போட்டிகளில் நுழைகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்கள் இரண்டையும் இழந்து இலங்கை அணி இத் தொடரிலாவது வெற்றியின் பக்கம் திரும்ப வேண்டும்.
இதேவேளை விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
இதனால் ஒரு நாள் மற்றும் டி-20 தொடரில் ஆடுவதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட 2 ஆம் தர இந்திய அணி, இலங்கை்கு எதிராக தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த காத்துள்ளது.
இந்த தொடர் முதலில் கடந்த 13 ஆம் திகதி தொடங்க இருந்தது.
எனினும் இலங்கை அணி ஊழியர்கள் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அதிகரிப்பு காரணமாக 5 நாள் தாமதமாக இப்போது தொடங்குகிறது.
பொதுவாக எமது நாட்டில் போட்டி நடந்தால் இலங்கை அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் இருக்கும். காரணம் வீரர்கள் உள்ளூர் ஆடுகள சூழலை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால் தற்போது அணியில் போதிய அனுபவம் இல்லாத பல வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து தொடரின் போது உயிர் குமிழி விதிமுறையை மீறி ஒழுக்காற்று பிரச்சினையில் சிக்கிய குசல் மெண்டீஸ், தனுஷ்க குதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து தொடருக்காக அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவும், பினுர பெர்னாண்டோவும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
ஊதிய ஒப்பந்த விவகாரத்தால் சகலதுறை ஆட்டக்காரர் அஞ்சலோ மெத்தியூஸும் பின்வாங்கி விட்டார். இதனால் இலங்கை அணி பலவீனமாக தென்படுகிறது.
மறுபுறம் விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், பும்ரா, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணியில் திறமைக்கு பஞ்சமில்லை.
அடுத்து வரும் டி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ஓரிரு இடங்கள் மட்டுமே வெற்றிடமாக இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்கும் முயற்சியுடன் இந்திய இளம் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிக்காட்டும் முனைப்புடன் உள்ளதால் அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.