இலங்கை அரசால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை முகநூல் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இதனையடுத்தே, முகநூலை இலங்கையில் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்
குழுவுக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பில் அரச தலைவர் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
அரச தலைவரின் செயலர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கும் முகநூல் நிறுவன அதிகாரிகளுக்குமிடையில் நேற்று முற்பகல் அரச தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தீர்மானங்கள் மற்றும் உடன்பாடுகள் குறித்து தற்போது ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அரச தலைவர் மைத்திரிபால கேட்டறிந்ததன் பின்னர் தடையை நீக்கும் பணிப்புரையை விடுத்துள்ளார்.
கடந்த சில நாள்களாக தேசிய ஐக்கியத்திற்கும், மக்கள் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும் விதத்தில் கலவர சூழ்நிலை பரவுவதை தவிர்க்கும் வகையில் சில சமூக ஊடகங்களுக்கு பிரவேசிப்பதற்கு தற்காலிகமாக தடைவிதிக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இந்த நடவடிக்கை காரணமாக அமைந்ததுடன், மக்கள் பாதுகாப்பு குறித்து உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அரச தலைவரின் பணிப்புரைக்கேற்ப அரச தலைவரின் செயலர் ஒஸ்டின் பெர்னாண்டோவினால் முகநூல் சமூக வலையமைப்பின் பிரதிதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது.
சமூக ஊடக வலையமைப்பை பிழையாகப் பயன்படுத்தி இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி மக்கள் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துதல், மக்கள் வாழ்க்கையை சீர்குலைத்தல் மற்றும் சில அடிப்படை வாதிகளினால் சமூக ஊடக வலையமைப்பு துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்தும் இதன்போது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
அந்தவகையில் இனவாத, மதவாத வெறுப்புப் பேச்சுக்கள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முறைமைகளையும் நிறுவனக் கட்டமைப்பையும் ஏற்படுத்துவதற்கு முகநூல் அதிகாரிகள் உடன்பட்டனர். இதன்போது அரசு, சிவில் குடிமக்கள் அல்லது குற்றவிசாரணை நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் உடனடியாக பதிலளிக்கவும் செயற்படவும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.
முகநூல் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி வெறுப்புப் பேச்சுக்களை பரப்புவது இலங்கை சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்பதுடன், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக முகநூல் சமூக உடன்படிக்கைக்கேற்ப செயற்பட அந்த நிறுவனம் இணக்கம் தெரிவித்தது.
இந்த உடன்பாடு குறித்து முன்னேற்ற மீளாய்வொன்றை உரிய கால இடைவெளியில் இருதரப்பிற்கும் இடையில் மேற்கொள்வதற்கும் அதற்கேற்ப மிகவும் வினைத்திறனான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டவகையில் எதிர்காலத்தில் செயற்படவும் இருதரப்பிற்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.
இந்தத் தற்காலிக சமூக ஊடகத் தடை காரணமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து அரசு கவலை தெரிவித்துள்ளது – என்றுள்ளது.