இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அழைத்து சென்ற படகு பறிமுதல்!
தமிழ் நாடு முட்டத்தில் இருந்து இலங்கை தமிழர்களை அவுஸ்திரேலியா அழைத்து சென்ற படகு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட படகானது தற்போது சின்னமுட்டம் துறைமுக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 36 வயதான கோபிநாத் அவரது மனைவி சோபனா உள்ளிட்ட ஒன்பது பேரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்வதற்கு முயற்சிக்கப்பட்டது.
குறித்த ஒன்பது பேரும் கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகில் அழைத்து செல்லவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், குறித்த விடயத்தின் அறிந்த பொலிஸார் தமிழ் நாடு பொள்ளாச்சியை சேர்ந்த அருள் இன்பதேவர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
அத்துடன், மேலும் மூன்று பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் படகு முட்டம் அருகே முட்டம் சேரியா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அந்த படகில் 15 ஆயிரம் லீட்டர் எரிபொருளும் இருந்துள்ளன. இந்நிலையில் குறித்த படகிளை கியூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும்நோக்கில் கடலோர பாதுகாப்பு பொலிஸாரின் உதவியுடன் சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த படகுக்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
படகின் உரிமையாளர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் விசாரணை கேரளாவிலும் நடைபெற்று வருகின்றது.