கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் சனிக்கிழமை (13) இரவு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தெற்காசிய கூடைப்பதாட்ட சங்க (SABA) சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 87 – 62 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியீட்டி சம்பியனான இந்தியா, FIBA 18 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றது.
முதல் இரண்டு ஆட்டநேர பகுதிகளில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட போட்டியில் இடைவேளையின்போது இந்தியாவும் இலங்கையும் தலா 43 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தன.
எனினும் இடைவேளையின் பின்னர் ஏகப்பட்ட தவறுகளை இழைத்த இலங்கை, புள்ளிகள் பெறும் பல வாய்ப்புகளை கோட்டை விட்டு தோல்வியைத் தழுவியது.
போட்டியின் முதலாவது ஆட்டநேர பகுதியில் இரண்டு அணியினரும் கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொண்டதுடன் அப் பகுதியை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் 19 – 16 என இந்தியா தனதாக்கிக்கொண்டது.
இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் திறமையாக விளையாடிய இலங்கை, அப் பகுதியை 27 – 24 என தனதாக்கி இடைவேளையின் போது புள்ளிகள் நிலையை 43 – 43 என சமப்படுத்தியது.
ஆனால், இடைவேளையின் பின்னர் மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் இலங்கை வீரர்கள் ஏகப்பட்ட தவறுகளை இழைத்ததுடன் கிட்டத்தட்ட 10 சந்தர்ப்பங்களில் புள்ளிகள் பெறும் வாய்ப்பை கோட்டை விட்டனர். இதனை சாதகமாக்கிக் கொண்ட இந்திய அணி அப் பகுதியை 20 – 7 என தனதாக்கி 13 புள்ளிகள் வித்தியாசத்தில் (63 – 50) முன்னிலை அடைந்தது.
கடைசி ஆட்டநேர பகுதியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா அப் பகுதியையும் 24 – 12 என்ற புள்ளிகள் தனதாக்கி 87 – 62 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனானது.
இந்தியா சார்பாக எம். இஷான் 22 புள்ளிகளையும் எம். தனசேகர் 19 புள்ளிகளையும் அணித் தலைவர் லாவிஷ் 17 புள்ளிகளையும் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை சார்பாக டெரன் பேர்னார்ட் 13 புள்ளிகளையும் எவீன் சேனாரத்ன 13 புள்ளிகளையும் அணித் தலைவர் மெத்திக்க ஜயசிங்க 10 புள்ளிகளையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் பங்களாதேஷை 59 – 57 (5 – 12, 23 – 10, 13 – 22, 18 – 13) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மாலைதீவுகள் வெற்றிபெற்றது.