இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்றுள்ள பாகிஸ்தான், இலங்கை அணிகள், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி துபாயில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் உபுல் தரங்கா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணிக்கு அகமது ஷேசாத் (0) மோசமான துவக்கம் தந்தார். பகார் ஜமான் (43), முகமது ஹபீஸ் (32) ஓரளவு கைகொடுத்தனர். சோயப் மாலிக் (81) அரைசதம் கடந்தார். கேப்டன் சர்பராஸ் அகமது (1) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய பாபர் ஆஸம் (103) சதம் கடந்தார்.
பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தது. இமாத் வாசிம் (10), ஹசன் அலி (11) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் சுரங்கா லக்மல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா (19), கேப்டன் உபுல் தரங்கா (18) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. தினேஷ் சண்டிமால் (4), குசால் மெண்டிஸ் (2), மிலிண்டா சிறிவர்தனா (0) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய லகிரு திரிமன்னே (53) நம்பிக்கை தந்தார். திசாரா பெரேரா (21), ஜெப்ரி வாண்டர்சே (25) நிலைக்கவில்லை. அகிலா தனன்ஜெயா (50★) தன்பங்கிற்கு அரைசதமடித்தார்.
இலங்கை அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி, ரயீஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தானின் சோயப் மாலிக் வென்றார். இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி, அபுதாபியில் வரும் அக்., 16ல் நடக்கவுள்ளது.