இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 1- 0 என முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி மிர்பூரில் இன்று இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிகூர் ரஹீம் 84 ஓட்டங்களை பெற்றதுடன் தமீம் இக்பால் (52 ஓட்டங்கள்) மற்றும் மஹமதுல்லா ரியாத் (54 ஓட்டங்கள்) ஆகியோர் அரைச் சதம் பெற்றனர்.
பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளையும், லக்ஷான் சந்தகன், தனுஷ்க குணதிலக்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் 258 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் பங்களாதேஷ் அணிசார்பில் மெஹிந்தி ஹசன் 4 விக்கெட்டுகளையும் முஷ்ரபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டார்