வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்காக, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும், இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரவல் காரணமாக, கடந்த மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல், வெளிநாட்டிலிருந்து பயணிகள் இலங்கைக்கு வருவது தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (01) முதல் விமான நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இதற்காக சில விசேட கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஒரு விமானத்தில், 75 பேர் வரையில் மாத்திரமே பயணிக்க முடியும் என விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கட்டாரிலிருந்து 53 பயணிகளுடன், விமானம் ஒன்று இன்று (01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, தெரிவிக்கப்படுகின்றது
விமான நிலையங்கள் திறக்கப்பட்டாலும், இந்திய மற்றும் வியட்நாம் முதலான நாடுகளிலிருந்து வரும் பயணிகள், நாட்டுக்குள் நுழைவது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அந்த நாடுகளில் பரவும் கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.