இலங்கையில் மீண்டும் பதற்றம்! பற்றி எரியும் கப்பல்! தற்செயலான ஒன்றா? திட்டமிட்ட சதியா?
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரட்டப்பட்டதன் பின்னரான அரசியல் தளத்தில் என்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
கடந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடியில் ஈடுபட்டவர்களை குறித்து சமகால அரசாங்கம் வலை விரித்துள்ள போதிலும், சகல துறைகளிலும் ஊடுருவியுள்ள மஹிந்தவின் விசுவாசிகளால் அவை முறியடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அரசியல் ரீதியாக காணப்படும் நெருக்கடியான நிலைக்கு அப்பால், இராணுவ ரீதியாக ஏற்படும் பெரும் குழப்பங்கள் தென்னிலங்கையில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் தேசத்தில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெறும் நிகழ்வுகள் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவத்தின் மிகப் பெரிய ஆயுத களஞ்சியங்களில் ஒன்றாக கருதப்படும் கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் வெடிப்பு சம்பவங்களில் இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை தெளிவுபடுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.
இதுவரை காலமும் மிகவும் பாதுகாப்பாக பேணப்பட்டு வந்த ஆயுத களஞ்சியம் அவ்வளவு இலகுவில் வெடித்து சிதற எந்தவிதமான வாய்ப்பும் இல்லை. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்வில் இராணுவம் குழம்பியுள்ள நிலையில், இன்று மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பின் துறைமுகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி தேசமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட காரணம் என்ன? இயல்பாக நடைபெற்ற ஒன்றா அல்லது யாரெனும் ஒருவரின் தேவைக்காக இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இராணுவ மட்டத்தில் மிகவும் பலமான நபராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ காணப்பட்டார். ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பயனாக அவர் இன்று கைது செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சமகாலத்தில் அதிகாரத்தில் இல்லாத போதும், அரச துறைகள் மட்டுமன்றி இராணுவ படைக்குள் மஹிந்த மற்றும் கோத்தபாவின் தீவிர விசுவாசிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அண்மைக்காலமாக கோத்தபாய கைது செய்யப்படுவார், அரசியலில் நுழையப் போகும் கோத்தபாய நாட்டை ஆட்சி செய்வார் என்பது தொடர்பான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டு வருகின்றன.
நாட்டின் அதிகாரத்திற்கு வந்தால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்க தன்னால் முடியும் என்ற கருத்தினை கோத்தபாய அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகள் கோத்தபாயவின் தேவைக்காக நடைபெறுகிறதா என்பது தொடர்பில் பல்வேறு மட்டத்திலும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வடபகுதியிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கான நடைமுறைகளை சமகால தேசிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு சர்வதேசத்தின் கடுமையான அழுத்தம் காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கும் நோக்கில் ராஜபக்ஷ ரெஜிமென்டுகளால் இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஐயம் எழுந்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கையின் மூலம் சிங்களவர்களை நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்பி, ராஜபக்ஷ ரெஜிமென்ட் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான சதி நடவடிக்கையே இவ்வாறான அனர்த்தங்கள் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.