இலங்கையில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு உண்மைக்காகவும் நீதிக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் தரப்பினருக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, சிவில், பொருளாதார, கலாசார, சமூக மற்றும் அரசியல் உள்ளடங்கலாக அனைத்துத் துறைகள் சார்ந்த மனித உரிமைகளும் அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானவை என்பதை உணரச்செய்யும் வகையில் செயற்படத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (10) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு அவசியமான அடிப்படைக்காரணி ‘சமத்துவம்’ என்பதை இம்முறை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த விரும்புகின்றது.
மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் முதலாவது சரத்தில், ‘அனைத்து மனிதர்களும் கௌரவத்தையும் உரிமைகளையும் அனுபவிப்பதில் சுதந்திரத்துடனும் சமத்துவத்துடனுமே பிறந்திருக்கின்றார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்மனைவருக்குமான உரிமைகள் சமமானவையாக இருப்பினும் அந்த உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதில் அனைவருக்கும் சமத்துவம் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
கொரோனா வைரஸ் பரவல் மூலம் உலகளாவிய ரீதியில் சுகாதார சேவை, தடுப்பூசி, கல்வி மற்றும் சமூகப்பாதுகாப்பு ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதில் தனிநபர்களுக்கு இடையிலும் சமூகங்களுக்கு இடையிலும் காணப்படும் ஏற்றத்தாழ்வு நன்கு வெளிப்பட்டுள்ளது.
இந்தத் தொற்றுப்பரவலின் சமூக மற்றும் பொருளாதார ரீதியான விளைவுகள் ஏற்கனவே வலுவிழந்த நிலையில் இருப்பவர்கள் மீது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதையும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பல்வேறு வழிகளில் மட்டுப்படுத்தப்படுவதையும் அல்லது முழுமையாக மறுக்கப்படுவதையும் அவதானிக்கமுடிகின்றது.
எனவே தொற்றுப்பரவலில் இருந்து மீட்சியடைதல் என்பது மேலும் சமத்துவமான சிறந்த உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாகும்.
நாம் எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அதேவேளை, மறுபுறம் நீதியிலும் பொறுப்புக்கூறலிலும் உள்ள நம்பிக்கையையும் கட்டியெழுப்பவேண்டும்.
அதேபோன்று பொதுக்கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதுடன் அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கும் வகையிலான சமூகத்தை உருவாக்கவேண்டும்.
சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு நீதி, சமத்துவம், சுயகௌரவம், மனித உரிமைகள் ஆகியவற்றை அனைத்து வழிமுறைகளிலும் முன்னிலைப்படுத்திச் செயலாற்றவேண்டும்.
இந்நிலையில் சிவில், பொருளாதார, கலாசார, சமூக மற்றும் அரசியல் உள்ளடங்கலாக அனைத்துத் துறைகள் சார்ந்த மனித உரிமைகளும் அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானவை என்பதை உணரச்செய்யக்கூடியவகையில் இலங்கை அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து பணியாற்ற நாம் தயாராக இருக்கின்றோம்.
இந்நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தமது பங்களிப்பை வழங்கமுடியும் என்பதுடன் இதில் குறிப்பாக அரச கட்டமைப்புக்கள் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றன.
மேலும் இலங்கையில் மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்காக நாளாந்தம் தமது பங்களிப்பை வழங்குகின்ற மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பாராட்டுகின்றோம்.
அத்தோடு மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு உண்மைக்காகவும் நீதிக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் தரப்பினருடனான எமது ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]