மாவட்ட ரீதியில் பெற்றுக் கொள்ளப்படும் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான தரவுகளை உறுதிப்படுத்தல் மற்றும் பதிவு செய்வதில் ஏற்படுகின்ற தாமதமே நாளாந்தம் தொற்று உறுதிப்படுத்தப்படுவோர் எண்ணிக்கை கூடி குறைவதற்கு பிரதான காரணியாகும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
இலங்கையில் இது வரையில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் தெரிவுசெய்யப்பட்ட குழுவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் நூறு வீதம் நிறைவடைந்துள்ளன. இதேபோன்று இந்த தரப்பினருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் 49 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
மேலும் 20 – 30 வயதுக்கு இடைப்பட்டோரில் 17 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகையில் 55.5 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசியும் , 25.6 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மாவட்ட ரீதியிலிருந்து கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான தரவுகளில் எத்தனை தொற்றாளர்கள் என்ற இலக்கம் மாத்திரமே பெற்றுக் கொள்ளப்படும். எனினும் பின்னர் அது தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையை மதிப்பிடுவதில் சிக்கலை ஏற்படுத்தியமையின் காரணமாக தற்போது தொற்றாளரின் பெயர், வயது, முகவரி, பால், செய்யப்பட்ட பரிசோதனை (அன்டிஜன் அல்லது பி.சி.ஆர்.) உள்ளிட்ட சகல தரவுகளும் சேகரிக்கப்படுகின்றன.
இவ்வாறு முழுத்தரவுகளையும் கேசரிப்பதில் ஏற்படுகின்ற கால தாமதமே நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை கூடிக் குறைவதற்கு பிரதான காரணமாகும். இலங்கையின் சுகாதார கட்டமைப்பில் உடனுக்குடன் தரவுகளை சேகரிக்கும் முறைமையொன்று இல்லாமையே இந்த நெருக்கடிக்கான காரணமாகும். சுகாதார அமைச்சு துரிதமாக இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.