இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பதற்கு ராஜபக்சக்களே பொறுப்பு என அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதாரத்துறையை ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தாரைவார்த்தமையே இந்த மரண வீச்சு அதிகரிப்பதற்கு அடிப்படை காரணம் என்றும் அவதானிப்பு மையம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.
சவச்சாலைகளில் நிரம்பிவழியும் சடலங்கள்
இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றமை குறித்து வெளியாகியுள்ள புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சவச்சாலைகளில் கொரோனா மரணச் சடலங்கள் நிரம்பி வழிகின்றமை பேரழிவின் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இலங்கையின் முக்கியமான சில வைத்தியசாலைகள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாதளவில் திண்டாடி வருவதாக ஸ்ரீலங்காவிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்ரீலங்கா அரசு கொரோனா தொடர்பாக அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் அரசின் தூர நோக்கமற்ற செயற்பாடுகளே கொரேனா மரணங்கள் பெருகுவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்களும் விமர்சனம் செய்துள்ளன. கோத்தபாய ராஜபக்ஷ தரப்பினர் கொரோனாவை வைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலை முன்னெடுப்பதுவே இந்த மரணப் பெருக்கத்திற்கு அடிப்படை என்றும் சிங்கள அரசியல்வாதிகளே சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிணக்காடாக்க முயற்சியா?
கடந்த காலத்தில் பொதுமுடக்க நிலையை ஸ்ரீலங்கா அரசு அறிவித்திருந்தது. அப்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 45 மரணங்கள் பதிவாகி வந்த நிலையில் ஸ்ரீலங்காவை முடக்குமாறு ஸ்ரீலங்கா மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆலோசனை கூறியிருந்தது. தற்போதைய சூழலில் 90-98 வழைரயான மரணங்கள் நாள் ஒன்றில் பதிவாகும் சூழல் எற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானர் இலங்கை போன்ற நாட்டை பொறுத்தவரையில் கொரோனா மரண வீச்சு கடுமையாக அதிகரிப்பதை எடுத்துக் காட்டுகின்றது.
மாதம் ஒன்றில் கொரோனா காரணமாக 1500 மரணங்கள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அண்மையில் எதிர்வு கூறியிருந்த நிலையில் தற்போதைய நாளாந்த மரண விகிதத்தின்படி எதிர்வுகூறப்பட்ட எண்ணிக்கை இரட்டிப்பாக மாறுவதற்கும் அதனை விட அதிக எண்ணிக்கையில் மரணங்கள் இடம்பெறலாம் என்ற அபாயம் தோன்றியுள்ளது. இலங்கையில் இதுவரையில் 419பேர் கொரோனாவால் மரணித்துள்ளதாக ஸ்ரீலங்கா அரச புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
பாணந்துறை வைத்தியசாலையின் பிண அறையில் 45 கொரோனா சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் வெளியிட்ட செய்தி தென்னிலங்கையை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. குறித்த பிரதேசத்தின் சுடுகாடுகள் 24 மணிநேரமும் திறந்த நிலையில் காணப்படுவதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முதலிடத்தைப் பெறும் ஸ்ரீலங்கா
மனித உரிமை, அமைதி போன்ற விடயங்களில் மிகவும் பின் தங்கிய இடத்தை வகிக்கும் ஸ்ரீலங்கா, அண்மைய காலத்தில், இனப்படுகொலையில் உலகில் முதல் நாடு என்ற இடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் வெகுவிரைவில் கொரோனா மரணத்திலும் ஸ்ரீலங்கா முதல் இடத்தைப் பிடிக்கும் என்று ஸ்ரீலங்காவின் எதிர்கட்சியினர் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் உலகில் கொரோனா பரவலில் 99ஆவது இடத்தை ஸ்ரீலங்கா பிடித்திருந்தது. தற்போது கொரோனா மரணத்தில் ஸ்ரீலங்கா உலக அளவில் 22ஆவது இடத்தை பிடித்துள்ளது. வெகுவிரைவிலேயே ஸ்ரீலங்கா முதல் இடத்தைப் பிடித்து விடும் என்று எதிர்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்தின கூறியுள்ளார்.
தமிழர் தாயகத்தில் அதிகரிக்கும் மரணங்கள்
இலங்கையில் தமிழர் தாயகத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில் மரணப் பதிவுகளும் அதிகரிப்பதை காணக்கூடியதாக உள்ளது. கொரோனா தொற்றினால் 67 வயது மற்றும் 80 வயதுடைய இரண்டு முதியவர்கள் யாழ்ப்பாணத்தில் சாவடைந்துள்ளனர். யாழ் மாவடத்தில் இதுவரையில் 137 மரணங்கள் கொரோனாவினால் நிகழ்ந்துள்ளதாகவும் மருத்துவதுறையினர் கூறுகின்றனர். தினமும் கோவிட் தொற்றாளர்கள் தமிழர் தாயகத்தில் அடையாளம் காணப்படுகின்றனர்.
கோப்பாய் பகுதியில் மாத்திரம் 420பேர் கொரோனா தொற்று இனங்காணப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர். தமிழர் தாயகத்தில் உள்ள மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் வடக்கு கிழக்கு மாகாண சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இனவழிப்பு போரினால் பெரும் உயிரிழப்புக்களை சந்தித்த தமிழர் தாயகம் கொரோனாவினாலும் உலுப்பி எடுக்கப்படுகின்றது.
மரண அதிகரிப்பு என்ன காரணம்?
தனது இராணுவத்தைக் கொண்டும் தனது இராணுவத்தின் துப்பாக்கிகளைக் கொண்டும் தனது இராணுவத்தின் சீருடைகளைக் கொண்டும் கொரோனாவை அழித்துவிட முடியும் என்று நம்புகின்ற முட்டாள்தனமான நாடு ஸ்ரீலங்கா ஆகும். இது ஆசியாவின் ஆச்சரியம் மட்டுமின்றி உலக ஆச்சரியமாகவும் காணப்படுகின்றது. கொரோனாவை தடுக்க இராணுவத்தை ஈடுபடுத்தியமையின் வாயிலாக சுகாதாரத்துறையின் சுயாதீனத் தன்மையை குழி தோண்டி புதைத்தமையே இந்த மரண அதிகரிப்புக்கு காரணம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
ஸ்ரீலங்காவின் சுகாதாரத்துறை செத்துவிட்டதா என அவதானிப்பு மையம் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டிருந்தை இங்கே நினைவுகொள்ளத் தக்கது. கொரோனா தடுப்பு தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரியாக இனப்படுகொலைநயாளி சவேந்திர சில்வாவை நியமனம் செய்தமை மற்றும் தடுப்பூசி போட இராணுவத்தினரை பயன்படுத்தியமை போன்ற செயற்பாடுகளால் மருத்துவ துறையை இராணுவத்திடம் கையளித்தமை காரணமாகவே கொரோனா பேரழிவு ஸ்ரீலங்காவில் அதிகரித்துள்ளது. இதற்கான முழுப் பொறுப்பை கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். அத்துடன் பன்னாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைவதாக மருத்துவதுறையில் இராணுவ தலையீடு முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இதில் உலக சுகாதார ஸ்தாபனம் கரிசனை கொள்ள வேண்டும் என்றும் அவதானிப்பு மையம் வலியுத்துகின்றது….” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news