இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான 25திற்கும் அதிகமான ஆசிரியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பொது கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான்கொட தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த அனைத்து ஆசிரியர்களும், அண்மையில் நடைபெற்ற அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாடு ஆர்ப்பாட்ட பேரணிகளில் கலந்து கொண்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா, வலபனை, ஆணமடு, சிலாபம், அநுராதபுரம், புத்தளம் மற்றும் அம்பாறை ஆகிய கல்வி வலயங்களை சேர்ந்த ஆசிரியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட 400ற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு இதுவரை கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
அதிபர் − ஆசிரியர் ஆர்ப்பாட்டம் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இணைய வழி கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான்கொட குறிப்பிடுகின்றார்.
அண்மைக்காலமாக நாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் – அதிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.