இலங்கையில் அரங்கேற்றப்படும் மறைமுக சூழ்ச்சி! பலியாகப் போவது மைத்திரியா? மஹிந்தவா? ரணிலா?
இலங்கை அரசியல் மட்டத்தில் தற்போது பல்வேறு கோணங்களில் சூழ்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதான கட்சிகளின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அரசாங்கத்தை உடைந்து தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியின் கீழ் அரசாங்கத்தை அமைக்க திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
இதனொரு அங்கமாக அண்மையில் அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் எஸ்.பீ.திஸாநாயக்க ஆகியோரின் வெளியிட்ட கருத்து அமைந்துள்ளது.
புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யோசனையை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கமைய, ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாதென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தார்.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தான் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்படவில்லை என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
இவர்களின் கருத்து பரிமாற்றலின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி ஒன்று செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்கி மாநில ஒற்றுமையை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வது அவசியம் என கூறப்பட்டது. இதன்மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முயற்சிப்பதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது செயற்படுத்தப்படாத போதிலும், 13ஆம் திருத்தத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு சொந்தமானதாக உள்ளன.
ஜனாதிபதி முறையை தொடர்ந்து நடத்தி செல்வதென்றால் பொலிஸ் அதிகாரம் இன்றி காணி அதிகாரத்தை மாத்திரம் வழங்குவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உபாயத்தின் மூலம் பல நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்பார்த்துள்ளதாக தெரிய வருகிறது.
பிளவடைந்துள்ள சுதந்திர கட்சியை இதன் ஊடாக இணைத்து கொள்வது இதன் பிரதான நோக்கமாகும். ஐக்கிய தேசிய கட்சியில் பிரச்சினையை ஏற்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதே இதன் இரண்டாவது நோக்கமாகும்.
காணி அதிகாரங்களை வழங்குவதன் ஊடாக சிறுபான்மையினரை இணைத்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது மூன்றாவது நோக்காகும்.
இதேவேளை, புதிய அரசியலமைப்பை ஒன்றை உருவாக்குவதற்காக பெறப்பட்ட மக்களின் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்ட அறிக்கையை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் வைத்து கொள்ளும் ஒப்பந்தத்திற்கமைய பொலிஸ் அதிகாரம் இன்றி காணி அதிகாரம் உள்ளடக்கப்பட்டு, மாகாண சபை அதிகாரங்களை விரிவுபடுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானிப்பதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக தங்கள் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தங்கள் குடும்பத்திற்கு பிரச்சினை ஏற்படுத்தாக ஒப்பந்தத்திற்கமைய மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற ஆயத்தமாகுவதாக அறிவித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவதானம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இணைப்பதற்கு தடையாக உள்ள மஹிந்த தரப்பை நீக்கிவிட்டு முன்னோக்கி செல்வதற்கு தற்போது வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணக்கப்பாட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.