நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட்டுப்பாடு, மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஆகியவற்றால் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் மிக விரைவில் பெரும் ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக 12 பிரதான தனியார்துறைகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை மோசமான விளைவை எதிர்கொள்வதைவிட இன்றே பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்வது சிறந்ததென அந்தக் கூட்டமைப்பு அரசுக்கு நிலைமையை விபரித்துள்ளது.
கூட்டமைப்பு, ஆடை உற்பத்தியாளர்கள், இளம் தொழில்முனைவோர் சம்மேளனம், சர்வதேச வர்த்தக சம்மேளனம், இலங்கை ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம், நிர்மாணத்துறை சம்மேளனம் உள்ளிட்ட பன்னிரண்டு அமைப்புகள் இது தொடர்பில் அரசாங்கத்தை எச்சரித்துள்ளன.
இதேவேளை, நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமையிலிருந்து மீள்வதற்கு தேவையான உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.
நிர்மாணத்துறைக்கு உரிய மூலப்பொருட்களை இறக்குமதிசெய்ய முடியாததன் காரணமாக அந்தத் துறையிலிருந்த 50 ஆயிரம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக நிர்மாணத்துறை சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஸ்ஸங்க என். விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அந்நிய செலாவணி இருப்பு குறைவடைகின்றமை மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆறு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் இந்தக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]