இலங்கையில் டெங்கு நோயை ஒழிப்பதற்கு அவுஸ்திரேலியா உதவும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்தபோது டெங்கு மற்றும் சிறுநீரக நோய் இலங்கையில் காணப்படுவதை குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், டெங்கு நோய் ஒழிப்புக்கு உதவ அவுஸ்திரேலியா இரண்டு நிகழ்ச்சித்திட்டங்களை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் டெங்குநோய் நோய் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா உலக சுகாதார நிறுவனத்திற்கு 475,000 அவுஸ்திரேலிய டொலர்களை (ரூபா 58 மில்லியன்) உடனடியாக வழங்கும் என்று அவுஸ்திரேலிய அமைச்சர் பிசப் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையிலிருந்து டெங்கு நோயை ஒழித்துக்கட்டுவதற்கு இயற்கையான வொல்பேசியா பக்டீரியாவை அறிமுகப்படுத்துவதற்கான பரிசோதனையைச் செய்வதற்கு அவுஸ்திரேலிய மொனாஸ் பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை சுகாதார அமைச்சுக்குமிடையில் ஒரு கூட்டு ஆய்வை மேற்கொள்வதற்கு அவுஸ்திரேலியா ஒரு மில்லியன் டொலர்களை (ரூபா 118 மில்லியன்) வழங்குமென்றும் அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பக்டீரியா டெங்கு வைரஸ் மனிதர்களுக்குப் பரவுவதை தடுப்பதாகத் தெரிவித்த அவர், இது கடந்த ஆறு வருடங்களில் பிரேசில், கொலம்பியா, அவுஸ்திரேலியா, வியட்னாம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பக்டீரியா நுளம்பினால் ஏற்படும் சிகா மற்றும் சிக்கன்குன்யா போன்ற நோய்களையும் தடுக்கும் திறன்கொண்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். முக்கியமானதொரு சந்தர்ப்பத்தில் இத்தகைய உதவியை வழங்கியமைக்காக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புள் அவர்களுக்கும் அவுஸ்திரேலிய மக்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுக்கான தனது விஜயத்தின்போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்கான நன்மைகளை உறுதிசெய்யும் வகையில் அவ்வுடன்படிக்கைகளை இரண்டு நாடுகளும் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.
ஆட்கடத்தலைத் தடுப்பதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இலங்கை கடற்படைக்கும் நன்றி தெரிவித்தார்.
தனது விஜயத்தின்போது கலந்துரையாடப்பட்டதற்கு ஏற்ப சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகவும் இரண்டு நாடுகளும் இந்தக்கூட்டுறவை தொடர வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயன்முறையின் முன்னேற்றங்கள் குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எசல வீரக்கோன், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைஸ் ஹட்சிசன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.