ஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியை ஆப்கானிஸ்தான் மக்கள் வீதிகளில் கூடி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை ஆசிய கிண்ணத்தை ஆறாவது தடவையாக சுவீகரித்ததை அடுத்து, ஆப்கானிஸ்தான் வீரர்கள் நடனமாடியதோடு, சிலர் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
Afghans celebrate Sri Lanka’s Asia Cup final win vs Pakistan.(Twitter)
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆசியக்கிண்ண 2022 இன் சூப்பர் – 4 கட்ட கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டிருந்தமை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்ததே.
2022 ஆசியக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
குழுநிலையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளை வென்ற பிறகு ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் – 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆனால் சூப்பர் 4 கட்டத்தில் எந்த வெற்றியையும் ஆப்கானிஸ்தான் அணியால் பெற முடியவில்லை, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் ஆப்கானிஸ்தான் அணி தோற்றது.
இந்நிலையில், ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 171 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதையடுத்து இலங்கை அணி 8 வருடங்களின் பின்னர் 6 ஆவது தடவையாக ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் இலங்கையின் வெற்றியை ஆப்கானித்தான் மக்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.