சீனா மிகவும் நெருங்கிய நட்பு நாடு. ஆனால் இந்தியா எங்கள் சகோதர நாடு என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மேற்கோள் காட்டி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஹம்பாந்தோட்டையில் உள்ள தெற்கு துறைமுகத்தில் சீன ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்தியது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் உயர்ஸ்தானிகரின் இந்த கருத்து இன்று வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீன கப்பல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறும் குழப்பமான நேரத்தில், சீன கப்பலான ‘யுவான் வாங் 5’ ஐ இலங்கை துறைதுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கும் தீர்மானம் அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
இந்தியாவுடன் நெருக்கமான உறவு
அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், இந்தியாவுடன் மிக நெருக்கமான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் நாங்கள் ஒரு ஒத்துழைப்பு கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும். இலங்கையின் பாதுகாப்பிற்கு இந்தியா நங்கூரமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நெருக்கடியான காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக நின்ற இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த அவர் இலங்கை நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சியில் இந்தியாவின் உதவி ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.