தமிழ்நாடு காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவு, இலங்கை பாதாள உலக உறுப்பினர் ”அங்கொட லொக்கா”வின் நெருங்கிய உதவியாளரான ‘அதுருகிரியே லடியா’ என அழைக்கப்படும் சானுக தனநாயக்கவிடம் விசாரணைகளை நிறைவு செய்துள்ளது.
அத்துடன் பெங்களூரில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஜெயபிரகாஷ் என்கிற டி.கோபாலகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் அங்கொட லொக்காவுடன் இலங்கையை விட்டு வெளியேறிய தனநாயக்க, போலி ஆவணங்களை தயாரித்து பெங்களுரில் ஆதார் அட்டையை பெற்றுள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் போதைப்பொருள் வியாபாரியான சுரேஷ் ராஜுக்கு பெங்களூருவில் அடைக்கலம் கொடுத்ததற்காக கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.
சர்வதேச வலைப்பின்னல் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட ராஜூவின் அறிவுறுத்தலின் பேரிலேயே கோபாலகிருஷ்ணன் இலங்கையரான தனநாயக்கவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ”அங்கோட லொக்கா” கோயம்புத்தூரில் தங்கியிருந்த காலத்தில் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில், கோவையில் மறைந்திருந்த அங்கொட லொக்கா, 2020 ஜூலையில் இந்தியாவை விட்டு வெளியேற போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டைப் பெற திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரதீப் சிங் என்ற பெயரில் கோவையில் வசித்து வந்த அங்கோட லொக்கா துபாய் செல்ல விரும்பியதாக தமிழக குற்றத்தடுப்பு பிாிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
2021, நவம்பர் 13 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட”அதுருகிரியே லடியா’ என்ற சானுக தனநாயக்கவும் இந்தியாவை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தொியவந்துள்ளது.
எனினும் 2020 ஜூலை 3, ஆம் திகதி இறக்கும் வரை, கோயம்புத்தூரில் உள்ள சேரன் மாநகர் அருகில் இலங்கைப் பெண்ணுடன் மறைந்திருந்த “அங்கொட லொக்கா” சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாரா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அத்துடன் அங்கொட லொக்கா மற்றும் அதுருகிரியே லடியா ஆகிய இருவரும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குழு ஒன்றின் அங்கமாக இருந்ததால் அவர்கள் இந்தியாவில் மறைந்திருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார்களா? என்பது தொடா்பாகவும் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
லொக்கா மற்றும் தனநாயக்க இருவரும் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியதற்காக 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
எனினும் பிணை கிடைத்த பின்னா் இருவரும் தலைமறைவாக இருந்தனர். அதேநேரம் எதிரி குழுவின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து அவர்கள் இலங்கைக்கு திரும்ப விரும்பவில்லை.
இதன் காரணமாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டைப் பெற்று இந்தியாவை விட்டு வெளியேறுவதே அவர்களின் திட்டமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கொட லொக்கா அல்லது சந்தன லசந்த பெரேரா, தமிழகம்- கோவை, பாலாஜி நகரில் தலைமறைவாகத் தங்கியிருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக 2020 ஜூலை 3 ஆம் திகதியன்று காலமானார்.
இந்தநிலையில் அவர் தங்கியிருப்பதற்கு உதவியளித்த சிவகாமசுந்தரி என்ற சட்டத்தரணி, அங்கொட லொக்கா, அத்துருகிரிய லடியா என்ற தனநாயக்கவிடம் தமது கைத்துப்பாக்கியை கொடுத்தார் என்ற வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்.
இதனையடுத்தே சானுக தனநாயக்க தமிழக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]