தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் தீர்மானமிக்க மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் தனது கிரிக்கெட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட இளம் சுழற்பந்துவீச்சாளரான மஹீஷ தீக்சன 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்த பெறுபேறானது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அறிமுகப்போட்டியில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஒருவரின் அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியாக பதிவானது.
இதற்கு முன்னர் வனிந்து ஹசரங்க தனது அறிமுகப்போட்டியில் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்தமையே இருந்தது.
எனினும், சர்வதேச ஒருநாள் அறிமுகப் போட்டியில் தசுன் ஷானக்கவால் கைப்பற்றிய 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் என்ற பந்துவீச்சுப் பெறுதியே இலங்கை சாதனையாகவுள்ளது.
தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த மஹீஷ தீக்சன, தனது ஆரம்ப கல்வியை சேதவத்தை சித்தார்த்த வித்தியாலயத்தில் பயின்றார்.
இவரின் திறமைகளை கண்டுணர்ந்த கொழும்பு சென்.பெனடிக்ட் கல்லூரி நிர்வாகம், அவருக்கு முழுமையான புலமைப்பரிசில் வழங்கி தமது கல்லூரியில் இணைத்தது.
இதன்போது, அங்கு பந்துவீச்சுத் திறமைகளை மேலும் அதிகரித்து கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்கில் ஜெப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.
10 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மஹீஷ் தீக்சன குறித்த தொகையை சென்.பெனடிக்ட் கல்லூரியின் எதிர்கால இளம் கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்காக வழங்கியிருந்தார்.
பின்னர், படிப்படியாக முன்னேறி தனது 21 ஆவது வயதில் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்தார்.
நேற்றைய போட்டியில் இவர் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியைமை இலங்கை அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.
இப்போட்டியில் அவர் வீசிய முதல் பந்திலும் கடைசிப் பந்திலும் விக்கெட் வீழ்த்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.