சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடியினை எதிர்கொள்வார்கள்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை இந்தியா,அமெரிக்கா,சீனா ஆகிய நாடுகள் தங்களின் அதிகார போட்டிக்காக பயன்படுத்திக் கொள்வதை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் போராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றினையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஸ்தாபிக்கப்படும் சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில் வெளிப்படை தன்மையிலான பேச்சுவார்த்தையினை முன்னெடுப்பது அவசியமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளாமை கவனிக்கத்தக்கது.
நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கபபட்டுள்ள நடுத்தர மக்கள் மேலும் மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை இந்தியா,சீனா மற்றும் அமெரிக்காக ஆகிய நாடுகள் தங்களின் அதிகார போட்டிக்காக பயன்படுத்திக்கொள்வதை அவதானிக்க முடிகிறது. அமெரிக்கா,இந்தியா ஆகிய நாடுகள் சீனா தொடர்பில் இலங்கையில் தவறான கருத்துக்களை குறிப்பிடுகின்றன.
பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள பின்னணியில் அமெரிக்கா குறிப்பிட்டதை போன்று இலங்கைக்கு உதவி புரியவில்லை.
ஒத்துழைப்பிற்கான நிபந்தனைகளை மாத்திரம் தொடர்ந்து விதித்து வருவதை அவதானிக்க முடிகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுவார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றார்.