இலங்கைத் தமிழர்களுக்கு நீதியை வழங்கும் விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு “ட்ரம்பிற்கான தமிழர்கள் அமைப்பினால்” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இலங்கை அரச படையினரால் 1லட்சத்து 45 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச யுத்தக் குற்றச் செயல் நீதிமன்றம் என்பனவற்றின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ட்ரம்பிற்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ள ட்ரம்பிற்கான தமிழர்கள் அமைப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்டதன் பின்னர் தமிழர்களுக்கு எதிராக அநீதி இழைத்த எந்தவொரு சிங்களவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு நீதி கிட்டும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தென் சூடானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமெரிக்கா தைரியமானதும் சரியானதுமான தீர்மானங்களை எடுத்திருந்தது எனவும் அதேவிதமாக இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் ஐரோப்பிய காலணித்துவ ஆட்சிக்கு முன்னதாக தமிழ் மக்கள் எவ்வாறு சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் அனுபவித்தார்களோ அதே சுதந்திரமும் ஸ்திரத்தன்மையும் கிட்டும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்