உரத்தடையை அமுல்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதி புத்திஜீவிகளிடம் தேவையான ஆலோசனைகளை பெற்றிருந்தால் இன்று நாடு இவ்வாறானதொரு குழப்பத்திற்கு உள்ளாகியிருக்காது என நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அனைத்துத் தரப்பினருக்கும் பாரபட்சமின்றி தொலைநோக்குப் பார்வையுடன் தீர்மானங்களை எடுப்பது மிகவும் அவசியம் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கரு ஜயசூரிய வலியுறுத்தினார்.
நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உரம் கிடைக்காததால் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டனர். இதனால் உற்பத்தியில் கடும் சரிவு ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அரிசியை இறக்குமதி செய்வதை இதற்கான தீர்வாக நாம் பார்க்கவில்லை.
மருந்து, பால் மா, சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யப் பணம் இல்லாத நாம், அரிசியை இறக்குமதி செய்ய அன்னியச் செலாவணியை வீணடிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
மேலும், துறைமுகத்தில் சுமார் 1000 கொள்கலன்கள் உணவுப் பொருட்கள் டொலர் பற்றாக்குறையால் தேங்கிக் கிடக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நிர்வாகம் பலப்படுத்தப்பட வேண்டும்.
இதனால், ஏழைகள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதுடன், வாழ்க்கைச் செலவும் அதிகளவில் உயர்ந்துள்ளது. நாட்டில் மூன்று வேளையும் சாப்பிட முடியாத மக்கள் அதிக அளவில் உள்ளனர் என்பது உண்மையாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]