இலங்கைக்கு எதிரான 3ஆவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி நியூசிலாந்தின் குயின்ஸ்டவுனில் இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 73 ஓட்டங்களையும், குசல் பெரேரா 33 ஓட்டங்களையும், பெத்தும் நிசங்க 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்தின் பென் லிஸ்டர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 20 ஓவர்களில் 183 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஒரு பந்து மீதமிருக்க 6 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை கடந்து, 4 விக்கெட்டுகளால் த்ரில் வெற்றி பெற்று, தொடரை 2-1 என கைப்பற்றியது.
நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டிம் சீஃபர்ட் 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் லகிரு குமார 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடரின் ஆட்ட நாயகனாகவும் நியூசிலாந்து அணியின் டிம் சீஃபர்ட் தெரிவு செய்யப்பட்டார்.