காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் ப்ரபாத் ஜயசூரிய 3 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக மூன்றாவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த போதிலும் அணித் தலைவர் பாபர் அஸாம் குவித்த அபார சதம் பாகிஸ்தானை வீழ்ச்சியிலிருந்து மீட்டது.
தனது 41ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் பாபர் அஸாம் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 7ஆவது சதத்தைக் குவித்ததன் பலனாக பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 218 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அதன் கடைசி 2 விக்கெட்களில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்தமை விசேட அம்சமாகும். இலங்கை தனது கடைசி 2 விக்கெட்களில் 89 ஓட்டங்களை நேற்று பகிர்ந்திருந்தது.
தனது 41ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாபர் அஸாம் 7ஆவது டெஸ்ட் சதத்தை மிகவும் சவால்மிக்க சூழ்நிலையில் குவித்ததன் பலனாக பாகிஸ்தான் வீழ்ச்சியிலிருந்து மீண்டது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (17) தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 24 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான் அதே மொத்த எண்ணிக்கையில் அஸார் அலியின் விக்கெட்டை இழந்தது.
எனினும் பாபர் அஸாமும் மொஹமத் ரிஸ்வானும் 4ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கட்டியெழுப்ப முயற்சித்தபோது ரிஸ்வான் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இலங்கை சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான், ரிஸ்வானின் விக்கெட் உட்பட 5 விக்கெட்களை 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது. (112 – 8 விக்.)
ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் மறு பக்கத்தில் பாபர் அஸாம் 83 பந்துகளில் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இந்நிலையில் 17 ஓட்டங்களைப் பெற்ற ஹசன் அலியுடன் 9ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்த பாபர் அஸாம், கடைசி விக்கெட்டில் நசீம் ஷாவுடன் பெறுமதிமிக்க 70 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
மொத்த எண்ணிக்கை 148 ஓட்டங்களாக இருந்தபோது 9ஆவது விக்கெட் விழ, பாபர் அஸாம் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஓவரிலும் 4ஆவது அல்லது 5ஆவது அல்லது கடைசிப் பந்தில் ஒற்றையைப் பெற்றவாறு புதிய ஓவரை எதிர்கொண்ட பாபர் அஸாம் அபார சதம் குவித்து 119 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக மஹீஷ் திக்ஷனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கடைசி விக்கெட்டில் பகிரப்பட்ட 70 ஓட்டங்களில் பாபர் அஸாமின் பங்களிப்பு 64 ஓட்டங்களாகும்.
311 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் 244 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் அடித்திருந்தார்.
நஸீம் ஷா 52 பந்துகளை தாக்குப்பிடித்து 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இலங்கை பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரமேஷ் மெண்டிஸ் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். மற்றைய விக்கெட்டை கசுன் ராஜித்த வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 4 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இலங்கை, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் 2ஆவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க 40 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது.
திமுத் கருணாரட்ன 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஓஷத பெர்னாண்டோ 17 ஓட்டங்களுடனும் இராக்காப்பாளன் கசுன் ராஜித்த 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்களைப் பெற்றது.
மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.