சவாலான நேரங்களிலும், இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்த உறுதியை, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது வழங்கியுள்ளார்.
இந்தியாவில் இராணுவ பயிற்சிகளை பெற்ற இலங்கை அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வின்போது, பாதுகாப்பு படைகளின் அதிகாரி சவேந்திர சில்வா உட்பட்ட பல உயர் இராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.
இலங்கைக்கு உதவ இந்தியா உறுதி
இந்தியாவின் எப்போதும், ‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ கொள்கைக்கு இணங்க, திறன் மேம்பாட்டில் இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது.
இதன்கீழ் சவாலான நேரங்களிலும் கூட, இலங்கை ஆயுதப்படைக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வில் உரையாற்றிய சவேந்திர சில்வா, இரண்டு நாடுகளையும் நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் அக்கறையுள்ள அண்டை நாடுகளாக இணைப்பதில் உயர் ஸ்தானிகரின் முயற்சிகளைப் பாராட்டினார்.
ஆண்டுதோறும், இலங்கையின் சுமார் 1500 படையினருக்கு இந்தியாவில் பயிற்சிகள் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.